சிங்கப்பூர் trending
சிங்கப்பூரில் காய்த்துத் தொங்கும் டுரியான்... அண்ணாந்து பார்க்கும் மக்கள்
படம்: Google Maps/Shawn Seah
லோராங் லியூ லியானில் (Lorong Lew Lian) டுரியான் பழங்கள் காய்த்துக் தொங்குகின்றன.
பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி டுரியான் பழங்களை மரத்திலிருந்து பறிக்கவோ கீழே விழுந்ததைச் சேகரிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தும் எச்சரிக்கைப் பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
தற்போதைக்கு அந்தப் பகுதியைச் சுற்றித் தற்காலிகத் தடுப்புகளைப் போடும் திட்டம் இல்லை என்று மரீன் பரேட் - பிராடல் ஹைட்ஸ் (Marine Parade–Braddell Heights Town Council) நகர மன்றம் 'செய்தி'யிடம் தெரிவித்தது.
அந்தப் பகுதியைக் கடந்துசெல்வோர் மரங்களிலுள்ள டுரியான் பழங்களை இயல்பாகவே அண்ணாந்து பார்ப்பதைக் காண முடிவதாகச் சமூக ஊடகங்கள் காட்டுகின்றன.
அங்கு வசிப்பவர்களில் சிலர் காலையிலேயே அங்கு நடமாடுவதாகவும் மரத்திலிருந்து விழும் டுரியான் பழங்களுக்காகக் காத்திருப்பது போல் தெரிவதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து 'செய்தி' நகர மன்றத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி தகவல்களைக் கேட்டது.
"புகார் இல்லை"
டுரியான் மரங்கள் குறித்தோ அங்குப் பழங்களைச் சேகரிக்கும் மக்கள் குறித்தோ குடியிருப்பாளர்களிடமிருந்து தங்களுக்கு இதுவரை எந்தப் புகாரோ கருத்துகளோ வரவில்லை என்று நகர மன்றம் சொன்னது.
டுரியான் விழுந்து யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை என்றும் மன்றம் கூறியது.
பழம் காய்க்கும் பருவத்தில், நகர மன்றம் நியமித்த தோட்டக்கலை ஊழியர்கள் அந்த மரங்களைக் கண்காணிப்பர்.
டுரியான் பழங்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதைத் தடுக்க, தேவைப்படும்போது அவர்கள் பழங்களை முன்கூட்டியே மரத்திலிருந்து அகற்றும் பணிகளையும் மேற்கொள்வர் என்றது மன்றம்.
அந்தப் பகுதியில் இப்போதைக்கு புதிய பழ மரங்களை நடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மன்றம் சொன்னது.
70 ஆண்டுகால வரலாறு
அந்தப் பகுதி வரலாற்று ரீதியாக, 70 ஆண்டுகளுக்கும் மேலாக டுரியான் தோட்டமாக இருந்துவருகிறது.
தற்போதுள்ள டுரியான் மரங்கள் 1995ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த மரம் நடும் விழா ஒன்றின்போது நடப்பட்டவை.
பின்னர் 2015இல் சிங்கப்பூரின் 50ஆவது தேசிய தின (SG50) கொண்டாட்டங்களின் போது மேலும் சில மரங்கள் நடப்பட்டன.
இன்று அங்கு 13 மரங்கள் உள்ளன.
"லோராங் லியூ லியான்" (Lorong Lew Lian) என்ற பெயர் டுரியான் பழத்தைக் குறிக்கும் 'ஹொக்கியன்' (Hokkien) சொல்லிலிருந்து உருவானது என்று மன்றம் குறிப்பிட்டது.
வேறு எங்கு?
இந்த இடம் தவிர்த்து புலாவ் உபின் (Pulau Ubin), மெக்ரிட்ச்சி நீர்த்தேக்கம் (MacRitchie Reservoir), செஸ்நட் இயற்கைப் பூங்கா (Chestnut Nature Park), யீஷூன் பூங்கா (Yishun Park), சுவா சூ காங் பூங்கா (Choa Chu Kang Park)உள்ளிட்ட இடங்களிலும் டுரியான் மரங்கள் இருப்பதாகத் தேசிய பூங்காக் கழகம் (NParks), தேசிய நூலக வாரியம் (NLB) ஆகியவற்றின் தகவல்கள் கூறுகின்றன.
சட்டம் என்ன சொல்கிறது?
சிங்கப்பூர் சட்டப்படி அரசாங்க நிலத்தில் உள்ள மரங்கள், அவற்றின் பழங்கள் உட்பட அனைத்தும் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை. அவை பொதுவாகத் தேசிய பூங்காக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.
பொது இடங்களிலிருந்து அனுமதியின்றி பழங்களைப் பறிப்பதோ சேகரிப்பதோ சட்டப்படி அனுமதிக்கப்படாது.
மீறுபவர்களுக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.