Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

முட்டைகளில் புழு - 4 ஆண்டுகளாக உருவாக்கிய நற்பெயருக்கு ஒரு நொடியில் களங்கம்: வருந்தும் கடைக்காரர்

வாசிப்புநேரம் -

யீஷூனில் உள்ள மளிகைக் கடையிலிருந்து வாங்கிய முட்டைகளில் புழுக்களைக் கண்டுபிடித்ததாக ஒருவர் நேற்று முன்தினம் (24 பிப்ரவரி) Facebook-இல் பகிர்ந்துகொண்டார்.

NiqNiqqi Akeel KenzySarah எனும் பயனீட்டாளர் பதிவேற்றம் செய்த காணொளியில் ஒரு தட்டு முட்டைகளைப் பார்க்கமுடிகிறது.

குறிப்பாக ஒரு முட்டையைச் சுற்றி நிறைய வெள்ளைப் புழுக்கள் தென்படுகின்றன.

முட்டையில் புழுக்கள் இருப்பதை வாங்கியபோது உணராத வாடிக்கையாளர் வீட்டுக்குச் சென்ற பிறகு அதைக் கவனித்ததாகக் கூறினார்.

ஒரு முட்டை கெட்டுப்போன நிலையில் இருந்ததாகவும் அதிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும் அவர் சொன்னார்.

நேர்ந்த சம்பவத்துக்கு Sri minimart-இன் திருமதி அங்குலட்சுமி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

"சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வதற்கு முன் எங்களிடம் சொல்லியிருந்தால் மன்னிப்புக் கேட்டு, புதிய முட்டைகளையோ அதற்கான பணத்தையோ கொடுத்திருப்போம்,"

என்று அவர் 'செய்தி'-இடம் சொன்னார்.

வாரந்தோறும் வரும் முட்டைகளை அடுக்குவதற்கு முன் அவை உடைந்துள்ளனவா என்பதை ஊழியர்கள் எப்போதும் சோதிப்பதுண்டு.

"இம்முறை ஒரு முட்டை உடைந்திருப்பதை நாங்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம். வாடிக்கையாளர்கள் சிலர் அவ்வப்போது தெரியாமல் முட்டைகளைக் கீழே போடுவதுண்டு. சிலர் அது குறித்து எங்களிடம் கூறமாட்டார்கள்...நாங்கள் முட்டைகளிலிருந்து துர்நாற்றம் வீசும்போது உடனடியாகச் சுத்தம் செய்துவிடுவோம்,"

என்று திருமதி அங்குலட்சுமி கூறினார்.

முட்டைகள் கெட்டுப்போகும்போது ஈக்கள் ஈர்க்கப்படுகின்றன. ஈக்கள் அவை மீது முட்டையிடலாம். ஒரு நாளுக்குள் முட்டைகளிலிருந்து புழு உருவாகலாம்.

முட்டைகள் மீது கடையின் ஊழியர்கள் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாகவும் பொருள்களை மேலும் ஒரு முறை சோதிக்கும்படி காசாளரிடம் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"வாடிக்கையாளர்களைச் சேர்ப்பது கடினம்..இழப்பதோ மிகவும் எளிது. 4 ஆண்டுகளாக உருவாக்கிய நற்பெயருக்கு ஒரு நொடியில் களங்கம்,"

என்று திருமதி அங்குலட்சுமி வருந்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்