துணிந்து இறங்கினேன் - முயன்றால் மட்டுமே நம் எல்லை நமக்குத் தெரியும் - வித்தியாசமான அழகுச் சேவையில் ஈடுபட்டிருக்கும் பெண்
#CelebratingSGWomen

#CelebratingSGWomen
அழகுத் துறையில் தடம் பதிப்பது அத்தனை சுலபமல்ல.
பத்தோடு பதினொன்றாகி விடுவோமா என்ற அச்சம் மேலோங்கவே பலர் இதில் அடியெடுத்து வைக்கிறார்கள்.

ஆரம்பக்கட்டத்தில் வாடிக்கையாளர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். COVID கிருமித்தொற்று போல ஏதாவது ஒன்று எழுந்தால், முதலில் அடிபடுவது அழகுப் பராமரிப்பு போன்ற துறைகள் தான்.
சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிகை வெகுவாகக் குறையும்.
ஆனால் நாம் செய்வதில் என்ன வித்தியாசம் என்று மக்கள் கண்டுகொண்டால், பிரச்சினையே இல்லை என்கிறார் இதில் வித்தியாசமான வகையில் தடம் பதித்துள்ள மகேஸ்.

சொந்தத் தொழில் செய்துவருவதோடு, அழகுப் பராமரிப்பு வகுப்புகளும் நடத்துகிறார்.
அவர் வழங்கும் சேவைகளில் மற்றொன்று, செயற்கைக் கண்ணிமை முடிகள் பொருத்துவது.
இது அவ்வளவு எளிதில் பலர் இறங்கத் தயங்கும் ஒன்று.
பொதுவாக இந்தியப் பெண்களின் கண்கள் மற்றவர்களது கண்களைவிட சற்றுப் பெரிதாக இருக்கும். அவர்களுக்கென்று சரியான செயற்கைக் கண் இமை முடிகள் பொருத்தும் சேவைகள் வழங்கப்படுவதில்லை
என்றார் அவர்.
பிற இனத்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட கண்ணிமை முடிகள் பொருத்தப்படும்போது இந்தியப் பெண்களுக்குச் சில நேரங்களில் அது சரியாக அமைவதில்லை.

அதை அடையாளம் கண்டு அந்தச் சேவையில் இறங்கினார் மகேஸ்.
அழகுப் பராமரிப்பு என்பதைத் தனிப்பட்ட ஒரு சேவையாக மட்டும் பார்த்திருந்தால், தற்போதுள்ள காலக்கட்டத்தில் மிகவும் சிரமப்பட்டிருப்பார் மகேஸ்.
ஆனால் வகுப்புகள், இமை முடிச் சேவை என்று பல்வேறு அம்சங்களைத் தொழிலில் உள்ளடக்கியதால், நிம்மதியாக இருக்கிறார் இவர்.
நீங்கள் செய்ய விரும்பும் எதில் வேண்டுமோ இறங்கலாம். பயம் கூடாது. துணிந்து இறங்கி முயன்றால் தான் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பது உங்களுக்கே தெரியவரும்!
என்பது மகேஸின் வெற்றி மந்திரம்.

காலத்துக்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளும் பக்குவம் தம்மிடம் இருப்பதாக நம்புகிறார் இவர்.
அதனால் கிருமிப்பரவலோ, வேறு சூழலோ தம்மையும், தம் தொழிலையும் பாதிக்காது என்பதை உறுதியாக நம்புகிறார் இந்த உதாரண மாது.