Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

எல்லைகள் திறக்கப்படும் என்று கேட்டவுடன் உள்ளத்தில் 'சொல்லமுடியாத' மகிழ்ச்சி - ஜொகூர் வர்த்தகர்கள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்- மலேசிய நில எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் ஜொகூர் வர்த்தகர்களுக்கு வழக்கநிலை மீண்டும் திரும்பும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

சிங்கப்பூர் வாடிக்கையாளர்களை நம்பியிருந்த வர்த்தகங்கள் ஈராண்டாக எல்லைக் கட்டுப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

சிங்கப்பூரர்கள் வராததால் வர்த்தகம் கிட்டத்தட்ட 60 விழுக்காடு குறைந்தது என்றும் தாம் சிரமத்துக்கு ஆளானதாகவும் மதுராஸ் மளிகைக் கடையில் நிர்வாகியாகப் பணியாற்றும் சரோஜா ரத்னம் 'செய்தி'யிடம் கூறினார்.

கடை செயல்படும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் சொன்னார்.

saroja

கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ளூர்வாசிகளிடமிருந்து ஆதரவு கிடைத்தது. இருப்பினும் நிறையப் பிரச்சினைகள் இருந்தன.. முன்பு காலை 8 மணிக்குத் திறந்தோம். இப்போது காலை 10 மணிக்குத் திறந்து, இரவு 8 மணிக்கு மூடவேண்டியுள்ளது

என்று சரோஜா தெரிவித்தார்.

mythili

ஏற்கெனவே கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளால் கடையை ஓராண்டுக்கு மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. எல்லைகள் மூடப்பட்டதால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக Mythili Textiles ஜவுளிக் கடையில் பணிபுரியும் சத்யா வாணி சொன்னார்.

வட்டாரத்தில் உள்ள பல கடைகள் முடங்கிப் போயின. எங்கள் கடைக்கு ஒரு வாடிக்கையாளர் கூட வராத நாள்களும் இருந்தன. அந்த அளவுக்குப் பாதிப்பு இருந்தது.

என்று அவர் தெரிவித்தார்.

shop

எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பது புது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருவதாக வர்த்தகர்கள் கூறினர்.

எல்லைகள் திறக்கப்படும் என்று கேட்டவுடனேயே மனத்தில் அவ்வளவு இன்பம். எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை

என்று சரோஜா சொன்னார்.

மூடப்பட்ட கடைகள் மீண்டும் செயல்படும் காட்சியை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று சத்யா வாணி கூறினார்.

வாடிக்கையாளர்களை ஈர்க்க வர்த்தகர்கள் சிலர் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். 

கடைகளில் மலிவு விற்பனை நடத்தப்போவதாகச் சிலர் கூறினர்.

இருப்பினும், சிறிது காலம் எச்சரிக்கையுடன் செயல்படவிருப்பதாக விற்பனையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

எல்லைகள் திறக்கப்பட்டதை அடுத்து, சிங்கப்பூரர்கள் வருவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்

என்று சரோஜா கூறினார்.

SHOP

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து,கடையின் நேரத்தை வழக்கநிலைக்கு மாற்றுவது குறித்தும் ஊழியர்களை அதிகரிப்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

சிங்கப்பூர்- மலேசிய நில எல்லைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 33,700க்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்