Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"சிங்கப்பூரில் 2 வாரங்கள் இருக்க நினைத்தேன். 2 ஆண்டுகளாக மாறியது" - மலேசியாவுக்குத் திரும்புவதில் மகிழ்ச்சி கொள்ளும் சிலர்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே, இருவழி விமானப் பயண ஏற்பாடு குறித்து நேற்று அறிவிப்பு வெளிவந்தது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே, இருவழி விமானப் பயண ஏற்பாடு குறித்து நேற்று அறிவிப்பு வெளிவந்தது.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக வாழும் மலேசியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

அது குறித்து சிலரிடம் விசாரித்தது,'செய்தி'.

2 வாரங்களுக்கு முடக்கநிலை நீடிக்கும் என்று எண்ணி, சிங்கப்பூரில் வேலைசெய்ய முடிவெடுத்தேன். ஆனால் அது 2 ஆண்டுகளாக மாறிவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. மலேசியாவுக்குச் செல்ல முடிவதில் மகிழ்ச்சி,

என்று கூறுகிறார், 34 வயது ஸ்ரீ.

டிசம்பர் மாதத்தில் மலேசியாவுக்குச் செல்லவிருக்கும் அவர், தம்முடைய குழந்தையை முதல்முறையாகச் சந்திக்கவிருக்கிறார்.

"எல்லைக் கட்டுப்பாடுகளால் முக்கியமான தருணங்கள் அனைத்தையும் தவறவிட்டுவிட்டேன். என்னதான் காணொளி அழைப்புகள் இருந்தாலும், நேரில் இருக்கும் அனுபவத்தைப் போன்று இருக்காது," என்று அவர் கூறினார்.

மலேசியாவிற்குச் செல்வதற்கான தேவை கணிசமாக அதிகரிக்கும் வேளையில், வேலையில் விடுப்பு எடுப்பது சவாலாக இருக்கும் என்று கிஷன் சொன்னார்.

மலேசியாவுக்குச் செல்ல,அதிகமானோர் விரும்புவார்கள். வேலையிடத்தில் அவர்களுடன் போட்டியிட்டு, விடுப்பு கேட்கவேண்டிய நிலை எழும்

என்று அவர் கூறினார்.

சிறப்புப் பயண ஏற்பாடு அறிமுகம் செய்யப்பட்டாலும் சிலர், சூழ்நிலை காரணமாக மலேசியாவுக்குத் திரும்பமுடியாது.

அவர்களில் ஒருவர், தாதியாகப் பணிபுரியும் ஸ்ரீயின் மனைவி.

குழந்தையைப் பெற்றெடுக்க அவர் மலேசியாவுக்குச் சென்றார். தற்போது குழந்தையை அங்கே விட்டுவிட்டு அவர் இங்கு வேலைசெய்கிறார். இங்கு தாதியருக்குப் பற்றாக்குறை நிலவும் வேளையில், அவர் மலேசியாவுக்கு எப்போது திரும்பமுடியும்..தெரியவில்லை,

என்று ஸ்ரீ சொன்னார்.

28 வயது அபிராமியோ, தற்போது மலேசியாவுக்குத் திரும்புவது சாத்தியமில்லை என்றும் நிலம் வழி பயணம் மேற்கொள்ளக் காத்திருப்பதாகவும் சொன்னார்.


(படம்:Try Sutrisno Foo)

மேலும் அதிகமான நாடுகளுடன் சிறப்புப் பயண ஏற்பாடு அறிமுகம் செய்யப்படும் வேளையில், முகவர்களுக்கு அதிகமான ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

EU Holidays நிறுவனத்தைப் பொறுத்தவரை, மலேசியாவிலுள்ள அதன் ஊழியர்களை மீண்டும் சிங்கப்பூருக்கு அழைக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

கிருமிப்பரவல் காரணமாக, ஊழியர்கள் பலரைச் சம்பளமில்லா விடுப்பில் அனுப்பவேண்டியிருந்தது. ஊழியர்கள் சிலரும் மலேசியாவுக்குத் திரும்பிவிட்டனர். இந்நிலையில், ஊழியர்களை அதிகரிக்க முயற்சி எடுக்கிறோம்.

என்று நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே, இருவழி விமானப் பயண ஏற்பாடு, இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையே பயணம் மேற்கொள்ளும், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர், தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்