$5.2 மில்லியன் பெறுமானமுள்ள மின்-சிகரெட் பொருள்களை வைத்திருக்க உதவிய ஆடவருக்குச் சிறை
சிங்கப்பூரில் 5.2 மில்லியன் வெள்ளி பெறுமான மின்-சிகரெட் பொருள்களை வைத்திருக்க உதவிய ஆடவருக்கு 10 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
38 வயது தோ வீ லியோங்கிற்கு (Toh Wee Leong) 14,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் பொருள்கள் பிடிபட்டன.
தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கில் சுமார் 409,000 மின்-சிகரெட் சாதனங்கள் இருந்தன.
சிங்கப்பூரில் இதுவரை ஒரே முறையில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டாவது ஆக அதிகமான மின்-சிகரெட் பொருள்களில் அவை அடங்கும்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட தோவுக்குச் சுமார் 80,000 வெள்ளி வரை கடன் இருந்தது தெரியவந்தது. அதைத் திருப்பிக்கொடுக்க அவர் மின்-சிகரெட் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
தோ ஏற்கெனவே 2022இல் சிங்கப்பூருக்குள் சுமார் 1,500 மின்-சிகரெட்டுகளைக் கடத்த முயன்றதற்காகக் கைதுசெய்யப்பட்டார்.
மின்-சிகரெட் பொருள்களை வைத்திருந்த குற்றத்துக்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனையோ 10,000 வெள்ளி வரை அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
குற்றத்தைத் திருப்பிப் புரிவோருக்குத் தண்டனை இரட்டிப்பாக்கப்படும்.