ஜூரோங் ஈஸ்ட்டில் முன்னாள் காதலியைக் கொன்ற ஆடவருக்கு 12 ஆண்டுகள் சிறை

(படம்: Google Maps)
ஜூரோங் ஈஸ்ட்டில் சென்ற பிப்ரவரி மாதம் முன்னாள் காதலியைக் கத்தியால் குத்திக் கொன்ற ஆடவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
37 வயது செங் சியான்பெங் (Zheng Xianfeng) கொலை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
மது அருந்திவிட்டுத் தொந்தரவு விளைவித்தது, அவரின் சகோதரரைக் காயப்படுத்தியது, முன்னாள் காதலியான தாம் மீ யோக்கைப் (Tham Mee Yoke) பேனாக் கத்தியால் காயப்படுத்தியது உட்பட மேலும் 4 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
முதன்முதலில் செங்கும் தாமும் 2018ஆம் ஆண்டு ஒரே வீட்டில் குடியிருந்தபோது சந்தித்தனர். பின்னர் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து அவர்களின் உறவு கசப்படையத் தொடங்கியது.
தாம் வேறொரு வீட்டிற்கு மாறினார்.
எனினும் செங் அங்குச் சென்று தாமைச் சந்திக்க முயன்றார்.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இரவு, மது போதையில் இருந்த செங், தாமின் வசிப்பிடத்திற்கு அருகே 26.5 சென்ட்டிமீட்டர் நீளக் கத்தியுடன் அவருக்காகக் காத்திருந்தார்.
அங்கும் செங் தொடர்ந்து மது அருந்தினார்.
நள்ளிரவுவாக்கில் தாம் திரும்பியபோது செங் அவரைக் கத்தியால் தாக்கினார்.
அப்போது வழிப்போக்கர் ஒருவர் தனிநபர் நடமாட்டச் சாதனத்தைக் கொண்டு செங்கைத் தடுத்துநிறுத்த முயன்றபோதிலும் அவர், தாமைத் தொடர்ந்து தாக்கினார்.
சம்பவத்தை நேரில் கண்ட சிலர் காவல்துறையைத் தொடர்புகொண்டனர்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தாம், கடும் காயங்களின் காரணமாக உயிரிழந்தார்.
சீனாவைச் சேர்ந்த செங் மோசமான மனச்சோர்வுக் கோளாற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொலைக் குற்றத்திற்குச் செங்கிற்கு ஆயுள் தண்டனையும் பிரம்படியுமோ 20 ஆண்டுச் சிறைத் தண்டனையுடன் பிரம்படியும் அல்லது அபராதமுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.