Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இருவர் மட்டுமே அமர்ந்து உண்ணலாம்-McDonalds அறிவிப்பு பெற்றோருக்கு மகிழ்ச்சி, இளையர்களுக்கு ஏமாற்றம்

மெக் டோனல்ட்ஸ் (McDonald's) நிறுவனம், நாளை முதல் அடுத்த மாதம் 8ஆம் தேதிவரை தனது உணவகங்களில் இருவர் மட்டுமே குழுவாக அமர்ந்து உண்ணலாம் என அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மெக் டோனல்ட்ஸ் (McDonald's) நிறுவனம், நாளை முதல் அடுத்த மாதம் 8ஆம் தேதிவரை தனது உணவகங்களில் இருவர் மட்டுமே குழுவாக அமர்ந்து உண்ணலாம் என அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் வேளையில், விரைவு உணவு நிறுவனம், தனிப்பட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

பொதுவான கட்டுப்பாடுகளின்படி, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களோ, பரிசோதனை மூலம் கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்தவர்களோ அதிகபட்சம் ஐவர் உணவகங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணலாம்.

ஆயிரக்கணக்கானோருக்குச் சேவை வழங்கும் மெக் டோனல்ட்ஸ், தனது ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க முற்படுகிறது.

நிறுவனத்தின் தனிப்பட்ட கட்டுப்பாடுகளை வரவேற்பதாகச் சொன்னார், 'செய்தி'-இடம் பேசிய திருமதி கங்காதேவி.

இரு பிள்ளைகளுக்குத் தாயான அவர், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

அனைத்து வயதினரும் செல்லும் இடமாக மெக் டோனல்ட்ஸ் உள்ளது. இத்தகைய முடிவால் பலருக்கும் பாதுகாப்பு. ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். இதை மற்ற விரைவு உணவகங்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

என்றார் திருமதி கங்கா.

தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் உணவகத்துக்குச் சிரமம் இருக்கலாம். இருப்பினும், அது அவசியம் என்கிறார் வழக்கமாக மெக் டோனல்ட்ஸ் செல்லும் வைஷ்ணவி.

இப்போது அனைவரின் பாதுகாப்பும் முக்கியம். உணவை அமர்ந்து ஒன்றாக உண்பதில் தனி இன்பம் உண்டு என்பது உண்மை தான். இருப்பினும், அதையும் தாண்டி குழுவாக உணவு உட்கொண்டு மகிழ்ச்சி அடைய மற்ற வழிகளும் உள்ளன.

என்றார் அவர்.

வாடிக்கையாளர்கள் இணையம் வழியே வாங்கும் உணவை, வீட்டுக்கு விநியோகம் செய்யும் சேவைகள் தொடரும் என்று மெக் டோனல்ட்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.

இருப்பினும், ஐவராக ஒன்றாகச் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சில இளையர்களுக்கு வருத்தம்.

மெக் டோனல்ட்ஸ் போன்ற விரைவு உணவகம் செல்வது உணவுக்காக மட்டும் அல்ல. ஒன்றாக இணைந்து நேரம் செலவிடும் இன்பம் அதில் கிடைக்கும். எனவே எனக்கு இது ஏமாற்றமளிக்கிறது.

என்றார் 18 வயது பரத்.

என் நண்பர்களும் நானும் இரு தடுப்பூசிகள் போட்டுவிட்டோம். அதனால் அறிவிப்பு வந்தவுடன் ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் மெக் டோனல்ட்ஸ் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டதால், வேறு உணவகங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கிறோம்.

என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத 22 வயது இளையர்.

(படம்: AFP/Roslan Rahman)

(படம்: AFP/Roslan Rahman)

இருப்பினும், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய தற்போதைய சூழலில் மெக் டோனல்ட்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு பொதுவாகப் பெற்றோருக்கு நிம்மதி அளித்திருக்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்