சிங்கப்பூர் trending
சிங்கப்பூர் - மலேசியாவில் எரிநட்சத்திரம்? இணையவாசிகள் வியப்பு!
(படம்: Facebook/CloudSpotting & SkySpotting Singapore)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வானில் பிரகாசமான பொருள் ஒன்று தென்பட்டதாகப் பலர் கூறியுள்ளனர்.
நேற்று இரவு சிங்கப்பூரின் சுவா சூ காங் பகுதியில் சுமார் 8.40 மணிக்கு அது தென்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
காணொளியைக் கண்ட ஓர் இணையவாசி உட்லண்ட்ஸிலும் அது தென்பட்டதாய்க் கூறினார்.
கிட்டத்தட்ட அதே நேரத்தில் மலேசியாவின் ஜொகூர் பாருவிலும் அதேபோன்ற காட்சியைக் காட்டும் மற்றொரு காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது.
ஜொகூரின் கோத்தா திங்கி (Kota Tinggi), லாபிஸ் (Labis), மெர்சிங் (Mersing) உள்ளிட்ட பகுதிகளிலும் பாஹாங் மாநிலத்தின் குவாந்தான் (Kuantan), ரொம்பின் (Rompin) பகுதிகளிலும் ஒளிக்கீற்றைப் பார்த்ததாகச் சிலர் தெரிவித்தனர்.
அது எரிநட்சத்திரமா பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த செயற்கைக்கோளின் பாகமா என்று இணையத்தில் விவாதிக்கப்படுகிறது.
ஒரு சிலர் அந்தக் காட்சியைக் கண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றனர்.
வேறு சிலர் அதை Transformers திரைப்படத்தின் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்தனர்.
அந்தப் பிரகாசமான பொருள் என்ன என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.