Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் முதலாளிகளின் வியாபாரத்தில் உதவலாமா?

வாசிப்புநேரம் -
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் முதலாளிகளின் வியாபாரத்தில் உதவலாமா?

(கோப்புப் படம்: CNA)

வீட்டில் வியாபாரம் அல்லது உணவுக்கடை வியாபாரம்..

அவற்றில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களை வேலை செய்யச் சொல்வது அனுமதிக்கப்பட்ட ஒன்றா?

இல்லப் பணிப்பெண்கள் என்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?

பொதுவாக வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் வீட்டு வேலைகளை மட்டும் செய்யலாம்.

மனிதவள அமைச்சிடம் அவர்களது பெயரின் கீழ் பதிவுசெய்யப்பட்ட முகவரியில் மட்டும்தான் அவர்கள் வேலை செய்ய முடியும்.

இல்லப் பணிப்பெண்களின் வேலை நியமன நிபந்தனைகளில் அவர்களுடைய பொறுப்புகள் பற்றித் தெளிவாகப் போடப்பட்டிருக்கும்.

அதில் முதலாளியின் வியாபாரத்தில் உதவி செய்வது பற்றி எதுவும் இருக்காது.

சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க முதலாளிகள் தங்களுடைய இல்லப் பணிப்பெண்களை வியாபார வேலைகளில் ஈடுபடுத்தாமல் இருப்பதே சிறந்தது என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.

அது மட்டுமல்லாமல் அந்த இல்லப்பணிப்பெண்களுக்கு மனவுளைச்சல், சோர்வு, காயங்கள் ஆகியவையும் ஏற்படலாம்.

அவர்களுடைய நலனைப் பாதுகாப்பது முதலாளிகளின் பொறுப்பு என்றது மனிதவள அமைச்சு.

சில உதாரணங்கள் - எதைச் செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது?

1) முதலாளி உணவுக்கடை நடத்துகிறார். மதிய நேர உணவு சாப்பிடப் பலரும் வரும்போது சாப்பாட்டைக் கட்டுவது போன்ற எளிதான செயல்களைச் செய்ய இல்லப்பணிப்பெண்ணிடம் சொல்வது..

❌ அனுமதி இல்லை. முதலாளியின் வீட்டில் மட்டும் அவர் வேலை செய்யலாம்

2) முதலாளி இணைய வர்த்தகத்தை நடத்துகிறார். சிறு சிறு வேலைகளை இல்லப் பணிப்பெண்ணைச் செய்யச் சொல்வது..

❌ அனுமதி இல்லை. முதலாளியின் வியாபாரத்திற்கு இல்லப்பணிப்பெண் உதவக்கூடாது. இல்லப்பணிப்பெண் முன்வந்து உதவினாலும் முதலாளிகள் அதை ஏற்கக்கூடாது.

3) பெற்றோர் அல்லது உறவினர் வீட்டில் பிள்ளையைப் பார்த்துக்கொள்ளச் சொல்வது..

✅ அனுமதிக்கப்படும். ஆனால் அதைச் செய்வதற்கு முன்பு மனிதவள அமைச்சிடம் அது பற்றித் தெரிவிக்க வேண்டும். இல்லப்பணிப்பெண்ணும் எழுத்துவடிவில் தங்களது ஒப்புதலை வழங்கியிருக்க வேண்டும்.
மேலும் அவர் இரு வீட்டிலும் முழு வீட்டு வேலைகளைச் செய்யாமல் இருப்பதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும்.

4) பெற்றோர் அல்லது மற்றவர்களின் வீடுகளுக்கு அவ்வப்போது இல்லப்பணிப்பெண்ணை அனுப்பிச் சுத்தம் செய்யச் சொல்வது..

❌ அனுமதி இல்லை. செய்யப்படும் வேலைக்குப் பணம் வழங்கப்பட்டாலும் அது சட்டவிரோதமான வேலை நியமனமாகக் கருதப்படுகிறது. அந்த விதிகளை மீறும் முதலாளிகளுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். அவர்கள் இல்லப்பணிப்பெண்களை வேலைக்கு எடுப்பதிலிருந்து தடை செய்யப்படுவர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்