Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

பேரங்காடிகளில் திருடப்படும் பால் மாவு...அதைச் சமாளிக்கப் பேராங்காடிகள் கையாளும் முறைகள் என்னென்ன?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அண்மையில் குழந்தைக்களுக்கான பால் மாவு களவாடப்படும் போக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு, பால் மாவுத் திருட்டுச் சம்பவங்கள் 80 பதிவாயின.

சுமார் $27,000 வெள்ளி இழப்பு நேர்ந்ததாக சிங்கப்பூர்க் காவல்துறை அறிவித்தது.

அந்தச் செய்தி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

செல்வச் செழிப்புமிக்க சிங்கப்பூரிலும் பால் மாவைத் திருடுகிறார்களா?

பால் மாவுத் திருட்டுச் சம்பவங்களைக் குறைக்க NTUC FairPrice, Cold Storage, Sheng Shiong, Giant ஆகிய பேரங்காடிகள் கையாளும் முறைகள் குறித்துக் கேட்டு அறிந்தது 'செய்தி'.

Sheng Siong பேரங்காடி, திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கக் காவல்துறையுடன் ஒன்றிணைந்து Shopwatch எனப்படும் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக 'செய்தி'யிடம் கூறியது.

"எங்கள் ஊழியர்களின் மேலாடையில் "SHOPWATCH. May I help you?" எனும் வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன.

அதனால் ஊழியர்கள் கவனமாக இருக்கின்றனர்.

திருடக் கூடாது என்பதை அது வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டுகிறது. மேலும், கடைகளில் CCTV கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன,"என Sheng Siongஇன் பேச்சாளர் கூறினார்.

கண்காணிப்புக் கேமராக்கள் திருட்டுச் சம்பவங்களைக் குறைக்க உறுதுணையாய் இருப்பதாக அவர் கூறினார்.

Cold Storage, Giant ஆகிய பேரங்காடிகளில் பால் மாவு திருடப்படும் சம்பவங்கள் குறைவாகவே உள்ளதாக DFI பேச்சாளர் 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார்.

ஊழியர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பால் மாவு வைக்கப்பட்டிருக்கும் அடுக்குகள் மீது கூடுதல் கவனம் செலுத்துமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

NTUC FairPrice பேரங்காடிகள் சிலவற்றில் குழந்தைகளுக்கான பால் மாவு வைக்கப்பட்டிருக்கும் அடுக்குகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக, அது CNAவிடம் தெரிவித்தது.

பால் மாவை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பேரங்காடி ஊழியரை அணுகி அந்த அடுக்குகளின் பூட்டைத் திறக்கச் சொல்லிக் கேட்க வேண்டும்.

அதன் பிறகே, பால் மாவுக் கலன்களை வாங்கலாம்.

அந்த முன்னோடித் திட்டம், சில வாரங்களுக்கு முன் தொடங்கியது.

வளாகத்தில் CCTV கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில், பால் மாவைத் திருடியவர்களில் பெரும்பாலானோருக்கு 2 வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் இல்லை என சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்திருந்தார்.

பால் மாவைத் திருடும் சிலர், மீண்டும் அதை விற்று லாபமீட்டுவதாகக் காவல் துறைக்குத் தெரியவந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், களவாடப்பட்ட பொருள்களை
வாங்குவது குற்றமாக வகைப்படுத்தப்படலாம் என வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

அது களவாடப்பட்டது என்பது தெரியாவிட்டாலும்கூட, அதை வாங்கியோர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டச் சட்டத்தில் இடமுண்டு.

பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்