Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"உறவைவிடப் பெரிது உதவும் மனது" - சிங்கப்பூரர்களின் நெகிழ்ச்சியான தருணங்கள்

வாசிப்புநேரம் -
அவசர நேரங்களில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் உதவி மனத்துக்குப் பெரிய ஆறுதலைக் கொடுக்கும்.

அதிலும் உதவியவர் சக நாட்டவராக இருந்துவிட்டால் அதில் ஏற்படும் உணர்வே தனிதான்.

அப்படிப்பட்ட சில தருணங்களை நாம் வாழ்வில் கடந்து வந்திருப்போம்.

சிங்கப்பூரின் 59ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த மாதத்தில் அறிமுகம் இல்லாத அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு எப்படியெல்லாம் உதவியுள்ளனர் என்பதை நினைவுகூருகின்றனர் சிலர்...

அவர்களின் அனுபவத்தைக் கேட்டது 'செய்தி'.
"பணம் கொடுத்து உதவினார்" - நளினி

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் தீபாவளிச் சந்தைக்குச் சென்றபோது தமக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொன்னார் நளினி.

"வாங்கிய பொருளுக்கு 150 ரிங்கிட் கொடுக்க வேண்டும். ஆனால் கையில் சிங்கப்பூர் பணம் மட்டுமே இருந்தது. அதனைக் கடைக்காரர் வாங்க மறுத்துவிட்டார். பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் என்னைப் பார்த்துவிட்டு உடனடியாக 150 ரிங்கிட்டை எடுத்துக் கொடுத்தார்"

அப்போதுதான் அவரும் சிங்கப்பூரர் என்பதைத் தெரிந்துகொண்டதாக நளினி சொன்னார்.
 
"விமான நிலையத்தில் கிடைத்த உதவி" - நீத்தா

"ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பும்போது பயணப் பெட்டிக்கான கூடுதல் எடையை வாங்க மறந்துவிட்டேன். கையில் போதிய பணமும் இல்லை. அதனால் பதறிப்போனேன். செய்வதறியாது தவித்த எனக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த சில சிங்கப்பூரர்கள் என்னுடைய சில பயணப் பெட்டிகளை ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக்கொண்டு எனக்கு உதவினர்"

அந்த உதவியை வாழ்நாளில் மறக்க முடியாது என்றார் நீத்தா.
"வீடு தேடி வந்து உதவியவர்" - கௌசல்யா

சந்தைக்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் பணப்பையைத் தொலைத்த கௌசல்யா தமது அனுபவத்தைப் பகிர்ந்தார்.

"வீட்டுக்கு வந்த பிறகுதான் பணப்பை தொலைந்து போனதை உணர்ந்தேன். பணம், அடையாள அட்டை, வீட்டுச் சாவி என அனைத்தும் அதில்தான் இருந்தன. காவல்துறையிடம் புகார் கொடுக் எண்ணினேன். ஆனால் அதற்குள் வீட்டுக்கு ஒருவர் வந்தார். சந்தையில் பணப்பையைக் கண்டதாகவும் அதில் இருந்த முகவரியைப் பார்த்து என்னிடம் கொடுக்க வந்ததாகவும் கூறினார். பணப்பை திரும்பக் கிடைத்தது"

அவரது உதவியை இன்று நினைத்தாலும் நெகிழ்கிறேன் என்றார் கௌசல்யா.

இப்படி உதவி பெற்றவர்கள் ஒருபக்கம் இருக்க, தாம் செய்த உதவியால் ஒரு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதை நினைவுகூர்ந்தார் சக்திபாலன்.
 
(படம்: சக்திபாலன்)
"உறவில்லை, நண்பர்கள் இல்லை…" -சக்திபாலன்

"உதவுவதற்கு இனம், மதம், மொழி பார்க்கத் தேவையில்லை. ஒரே மக்கள் என்ற உணர்வு இருந்தால் போதும். அந்த எண்ணத்தில்தான் கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு வயதுக் குழந்தைக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவினேன். அந்தக் குழந்தை இப்போது நலமாக இருக்கிறது. அது போதும்" என்றார் சக்தி.

இதுபோன்ற அனுபவங்கள் "ஒன்றாய், ஒன்றுபட்ட மக்களாய்" எனும் தேசிய தினக் கருப்பொருளைப் பிரதிபலிக்கிறது என்றால் மிகையாகாது.

 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்