Skip to main content
$2.8 பில்லியன் மோசடி வழக்கு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

$2.8 பில்லியன் மோசடி வழக்கு - சந்தேக நபர்கள் கொடுத்த நன்கொடை என்ன ஆகும்? அறநிறுவனங்களுக்குச் சிக்கல்? - விளக்குகிறார் வழக்கறிஞர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற முயல்வோர் வழங்கும் நன்கொடைகளைக் கண்டுபிடிக்க அறநிறுவங்களுக்கான ஆணையம் ஆலோசனை அறிக்கையை வெளியிடவிருக்கிறது.

2.8 பில்லியன் வெள்ளி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிலர் சிங்கப்பூரில் நன்கொடை வழங்கியிருக்கின்றனர்.

அவை விசாரிக்கப்படுகின்றனவா என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ(Josephine Teo) பதிலளித்தார்.

சில அறநிறுவனங்கள் காவல்துறையிடம் புகாரளித்துள்ளதாகவும் சில நிறுவனங்கள் காவல்துறையிடம் பணத்தைத் திரும்ப ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் திருமதி தியோ சுட்டினார்.

அறநிறுவனங்கள் சந்தேகப் பரிவர்த்தனைப் புகார் அறிக்கையை (Suspicious Transaction Reports) தாக்கல் செய்ய வேண்டும்.

இது சாத்தியமா? இனி அறநிறுவனங்கள் என்ன செய்யும்? ஒருவர் நன்கொடை அளிக்கும்போது அது தவறான வழியில் வந்த பணமா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

Shobna Chandran LLC சட்ட அலுவலக வழக்கறிஞர் ஷோபனா சந்திரன் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டார்.

சந்தேகப் பரிவர்த்தனைப் புகார் அறிக்கை (Suspicious Transaction Reports) என்றால் என்ன?

-- எந்தச் சொத்துக்கும் குற்றவியல் நடவடிக்கையோடு தொடர்பு இருக்கிறது என்று நியாயமான சந்தேகம் எழுந்தால், அந்தப் புகார் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

-- அதற்கான அலுவலகத்திடம் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

-- சட்டத்தின்கீழ் அது கட்டாயமாகும்.

அறநிறுவனங்கள் மட்டும்தான் அந்தப் புகாரைக் கொடுக்கலாமா?

பணமோ சொத்தோ இவை குற்றவியல் நடவடிக்கைகளோடு சம்பந்தப்பட்டவை என்ற சந்தேகம் எழுந்தால், சிங்கப்பூரில் உள்ள யார் வேண்டுமானாலும் அது குறித்துப் புகார் செய்யலாம்.

அறநிறுவனத்திற்கு வரும் நன்கொடை பல இடங்களிலிருந்து வரலாம். சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டினர் அல்லது சிங்கப்பூருக்கு வெளியே இருப்போர் அவற்றை வழங்கலாம்.

எனவே அறநிறுவனங்கள் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை நன்கு ஆராய வேண்டும்.

காவல்துறையிடம் பணத்தை ஒப்படைக்க அறநிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன - அடுத்து என்ன?

காவல்துறை விசாரணையில் ஈடுபட வேண்டியிருக்கும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வழக்கு விசாரணையில் அவை சாட்சியாக இடம்பெற வேண்டியிருக்கும்.

"அறநிறுவனத்தின் நடைமுறைகளைப் பொறுத்து மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். புதிய நன்கொடையாளர் ஒருவர் பெரியளவில் நன்கொடை வழங்கும்போது அறநிறுவனம் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது என்பது குறித்து விசாரிக்கப்படலாம்; அது அறநிறுவனத்தின் நற்பெயரைப் பாதிக்கலாம்," என்றார் வழக்கறிஞர் ஷோபனா.

அறநிறுவனங்கள் அதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?

💰 பெரிய நன்கொடை..

💰 நன்கொடை வழங்கும் நோக்கமில்லாமல் அடிக்கடி ஓர் இயக்கம் அல்லது தனிநபர் நன்கொடை வழங்குவது..

💰 பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்துத் தெளிவான பதில் இல்லை..

ஆகியவை சந்தேகத்தைத் தூண்டும் அம்சங்கள் என்றார் வழக்கறிஞர் ஷோபனா.

அறநிறுவனங்கள் இவற்றைத் தடுக்க தகுந்த நடைமுறைகளைச் செயல்பாட்டில் கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர் சொன்னார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்