தெம்பனிஸ் விபத்து : பெற்றோரை இழந்த சிறுவனுக்காகத் திரட்டப்பட்ட நிதி $461,000
படம்: Give.Asia
This audio is generated by an AI tool.
தெம்பனிஸில் நடந்த விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவனுக்கு உதவ 461,000 வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.
Give.Asia நிதித்திரட்டுத் தளம் அத்தகவலை வழங்கியது.
கடந்த மாதம் 29ஆம் தேதி தெம்பனிஸ் அவென்யூ 12இல் (Tampines Avenue 12) விபத்து நடந்தது.
இருவர் மாண்டனர். இருவருக்கும் வயது 24.
அவர்களின் மகனுக்கு 6 வயது.
உறவினர் ஒருவர் சிறுவனுக்கு நிதித்திரட்ட Give.Asia தளத்தை நாடியதாக அமைப்பு சொன்னது.
கடந்த சனிக்கிழமை (31 அக்டோபர்) நிதித்திரட்டு தொடங்கியது.
சில நாள்களில் 461,000 வெள்ளி திரட்டப்பட்டது.
11,600 பேர் பணம் கொடுத்து உதவினர்.
சிறுவனின் பெயரில் வங்கிக் கணக்கைத் திறக்க அவரின் குடும்பத்தார் திட்டமிடுவதாக Give.Asia சொன்னது.
அவருடைய கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, சேமிப்புக்கு நிதி பயன்பத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிறுவனுக்கு நிதியைக் கொண்டுசேர்க்கக் குடும்பத்தாருடன் ஓர் ஏற்பாடு செய்ய முன்வந்துள்ளதாக Give.Asia சொன்னது.
தற்போது அமைப்பின் வசம் நிதி உள்ளது;சட்டரீதியான அனுமதி கிடைத்த பிறகே நிதி வெளியிடப்படும் என்று அது கூறியது.
இம்மாதம் 12ஆம் தேதி நிதித்திரட்டு நிறைவடையும்.
தெம்பனிஸ் விபத்தின் தொடர்பில் 30 வயது ஆடவர் மீது 9 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தையும் காயத்தையும் ஏற்படுத்தியது, வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் காரை ஓட்டியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகியவை அவற்றில் அடங்கும்.