சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கும் மலர்க்கொத்தை விட எப்போதும் காட்டும் அன்பு அர்த்தமுள்ளது"

Unsplash
அன்னையர் தினம்..
தாயார் செய்த தியாகங்களுக்கு நன்றி சொல்லும் தினம்.
பிள்ளைகள் தங்களுடைய தாயாருக்குப் பரிசு வாங்கி கொடுப்பது, உணவு சாப்பிட அழைத்துச்செல்வது ஆகியவை வழக்கமான நடவடிக்கைகளாக ஆகிவிட்டன.
இந்திய அன்னையர் அதை எப்படிப் பார்க்கின்றனர்?
சிலரிடம் பேசியது 'செய்தி'..
"மேற்கத்திய வழக்கம்..."

"அன்னையர் தினம் மேற்கத்திய நாடுகளில் தோன்றியதாக இருந்தாலும், பல இந்தியர்கள் இதனை இப்போது மேற்கத்திய வழக்கமாகப் பார்ப்பதில்லை. மாறாக, அது தாய்மார்களின் அர்ப்பணிப்பைக் கொண்டாடும் தனி ஒரு நாளாக மாறியிருக்கிறது" என்று எலிசபெத் சொன்னார்.
"வணிகமயமாக உள்ளது"
"என்னைப் பொறுத்தவரை அன்னையர் தினம் அதன் உண்மையான நோக்கத்தை இழந்துவிட்டது. அம்மாவைக் கௌரவிக்க உருவாக்கப்பட்ட இந்த நாள் தற்போது வணிகமயமாக்கப்பட்டு விட்டதாக நான் கருதுகிறேன். " என்று சப்னா சொன்னார்.
"அன்னையைக் கொண்டாடக் குறிப்பிட்ட நாள் தேவையில்லை"

எந்த நாளாக இருந்தாலும் நாம் அன்னையைக் கொண்டாடலாம் என்று தாயார் இருவரும் கூறினர்.
"அன்னையை மகிழ்விக்க ஒரு சிறு செயல் போதும் - வீட்டு வேலைகளைச் செய்யலாம், அவர்களுடன் நேரத்தைச் செலவிடலாம், அவர்களுக்கு நன்றி கூறலாம்....ஆண்டுக்கு ஒருமுறை கொடுக்கும் மலர்க்கொத்தை விட இது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும்" என எலிசபெத் சொன்னார்.
எப்போதும் அம்மாவுடன் உறவாடி மகிழ்ந்திருப்பதன் வாயிலாக உண்மையான அன்பை வெளிப்படுத்தலாம் என்றார் சப்னா.
அன்னையர் தினம் மேற்கத்திய வழக்கமாக இருந்தாலும் குழந்தைகளிடமிருந்து அன்பைப் பெறவும் நம் அம்மாவுக்கு அன்பை வெளிப்படுத்தவும் ஓர் அழகான நாள் இருப்பது நல்லதுதானே என்று சிலர் கூறுகின்றனர்.
"தமிழ்ப் பண்பாடு மாறிவிடாது..."
"தமிழ்க் கலாசாரத்தில் அன்னையருக்கு எப்போதும் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அன்பு, அர்ப்பணிப்பு, வலிமையின் அடையாளமாக அன்னையர் போற்றப்படுகின்றனர். எனினும், தமிழ்க் கலாசாரத்தில் தாயாருக்குத் தனி நாள் இல்லை. அன்னையர் தினத்தைக் கொண்டாடுவதால் தமிழ்க் கலாசாரம் மாறிவிடும் என்று சொல்லமுடியாது," என்றார் ரேமா.

எல்லா நாளும் அன்னையர் தினம்தான்..ஆனால் அன்னையர் காட்டிவரும் அளவற்ற அன்பையும் அக்கறையையும் நினைவூட்டும் ஒரு வழியாக அன்னையர் நாள் அமைகிறது என்று சிலர் கருதுகின்றனர்.
அன்னையரைக் கொண்டாட உள்ளார்ந்த வார்த்தைகளைப் பேசி, சிறப்பு உணவுகள் சமைத்து அல்லது அர்த்தமுள்ள பரிசுகளை அவர்களுக்குக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவதில் தவறு இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.