தீப்பற்றிக்கொண்ட மோட்டார்சைக்கிள் - மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஓட்டுநர்
படம்: Serene Tiong
மண்டாய் அவென்யூவில் (Mandai Avenue) மோட்டார்சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், 52 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
மோட்டார்சைக்கிளோட்டி, கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும்போது சுயநினைவுடன் இருந்தார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் தொடர்பிலான விசாரணையில் அவர் ஒத்துழைப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த விபத்துக் குறித்துக் காலை சுமார் 7.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
சாலையின் நடுவில் மோட்டார்சைக்கிள் தீப்பற்றி எரிந்த காட்சி காணொளி ஒன்றில் பதிவானது.
தண்ணீர்க் குழாயின் உதவியுடன் தீயை அணைத்ததாகக் கூறியது சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை.
தீ எவ்வாறு மூண்டது என்பதைக் கண்டறியும் விசாரணை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.