சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
தெளிவாக, எளிமையாகச் செய்தியைப் படைப்பதில் திரு பீட்டருக்கு நிகரில்லை: வருந்திய ரசிகர்கள்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்/Facebook Mediacorp Oli 968
அவருக்கு வயது 77.
அவருடன் பணியாற்றியோரும் அவரது ரசிகர்களும் அவரை நினைவுகூர்ந்தனர்.
"வாழ்க்கையில் நல்ல நண்பர் கிடைப்பது வரம்"
"பீட்டர் ஊடகத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவருடன் சேர்ந்து வானொலி நிகழ்ச்சிகளைப் படைத்த அனுபவம் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைப்பது வரம். பீட்டர் எனக்குக் கிடைத்த வரம்,"
முன்னாள் வானொலிப் படைப்பாளர்
திரு செ. ப. பன்னீர்செல்வம் உணர்ச்சிகள் மேலோங்கச் 'செய்தி'யிடம் பேசினார்.
"தமிழ்ப் பணி அளப்பரியது"
"திரு பீட்டரின் தமிழ்ப் பணி அளப்பரியது. அவரது படைப்பாற்றலும் குறிப்பாகத் தமிழ் உச்சரிப்பும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமளவில் உதவியிருக்கின்றன,"
"பலருக்கு முன்மாதிரி"
"திரு பீட்டரின் குரலுக்குப் பல ரசிகர்கள். அதில் நானும் ஒருவர். அவர் பலருக்கு முன்மாதிரியாக இருந்தவர். அவரது மறைவு தமிழ் ஊடகத்துறைக்கும் சமூகத்திற்கும் பேரிழப்பு,"
என்றார் எழுத்தாளர் இளவழகன்.
"செய்திப் பிரிவில் விட்டுச்சென்ற சுவடுகள் என்றும் நிலைத்து நிற்கும்"
"திரு பீட்டருக்குத் தனித்துவமான குரல். அவர் வாசிப்பதைக் கேட்கும்போது செய்தி எளிதில் மனத்தில் பதிந்துவிடும். அவரது குரலை இனிமேல் கேட்கமுடியாது என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. அவர் செய்திப் பிரிவில் விட்டுச்சென்ற சுவடுகள் என்றும் நிலைத்து நிற்கும்,"
"ஓர் உயர்ந்த உள்ளத்தை இழந்துவிட்டோம்"
"திரு பீட்டர் செய்தி வாசிப்பின் தரத்தை உயர்த்தியவர். வயதானாலும் அவர் துல்லியமாக, கவனமாக எந்தவொரு தொய்வுமின்றி செய்தியை வாசித்தார். ஊடகத்துறையில் ஒரு ஜாம்பவானை இழந்துவிட்டோம்; ஓர் உயர்ந்த உள்ளத்தை இழந்துவிட்டோம் என்றே சொல்லவேண்டும்",
என esplanadeஇல் தயாரிப்பாளராகப் பணியாற்றும் ரசிகர் ப. டேவிட் 'செய்தி'யுடன் பகிர்ந்தார்.
வானொலி நிகழ்ச்சிகளைப் பல்லாண்டுகளாகக் கேட்டு ரசித்த திருமதி பானுமதி தங்கராஜன் மனந்திறந்து பேசினார்.
"பிடித்த வானொலிப் படைப்பாளர்களில் திரு பீட்டருக்கே முதலிடம்"
"திரு பீட்டர் தெளிவாக, எளிமையாகச் செய்தியைப் பிறரிடம் கொண்டுசேர்ப்பார். எனக்குப் பிடித்த வானொலி படைப்பாளர்களில் அவருக்கே முதலிடம். இவ்வாண்டு பிரதான விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டபோது பேரின்பம் அடைந்தேன். அவரது எதிர்பாரா மறைவு வருத்தமளிக்கிறது",
என்றார் அவர்.
திரு பீட்டர் மறைந்தாலும் அவரது குரலும் நினைவுகளும் என்றும் மனத்தை விட்டு நீங்காது என்று அவருடைய ரசிகர்கள் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.