Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முன்னோடித் திட்டம், வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது'

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்டக் கட்டுப்பாடுகள், படிப்படியாகத் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
'நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முன்னோடித் திட்டம், வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது'

துவாஸ் வியூ வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி | படம்: Jeremy Long

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்டக் கட்டுப்பாடுகள், படிப்படியாகத் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சுமார் 18 மாதங்களாக, வேலை இல்லாதபோது விடுதிகளிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது COVID-19 நோய்த்தொற்று.

நேற்று (செப்டம்பர் 9) அறிவிக்கப்பட்ட முன்னோடித் திட்டத்தின் கீழ், தடுப்பூசி போட்ட 500 ஊழியர்கள் வரை வாரந்தோறும் லிட்டில் இந்தியா போன்ற வெளியிடங்களுக்குச் செல்லலாம்.

அதை வரவேற்பதாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் ItsRainingRaincoats (IRR) சமூக அமைப்பின் நிறுவனர் தீபா சுவாமிநாதன் 'செய்தி'யிடம் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான மேலும் அதிகமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ஆர்வமாக இருக்கிறோம். ஊழியர்களுடன் மீண்டும் கலந்துரையாட அமைப்பின் ஆயிரக்கணக்கான தொண்டூழியர்கள் காத்திருக்கிறார்கள்.

வரும் வாரங்களில், கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

முன்னோடித் திட்டம் பற்றிய அறிவிப்பு, வெளிநாட்டு ஊழியர்களை உற்சாகப்படுத்தியுள்ளதாக COVID-19 வெளிநாட்டு ஊழியர் ஆதரவுக் கூட்டணியின் (Covid-19 Migrant Support Coalition, CMSC) துணை நிறுவனர் ரெனிட்டா சோஃபியா கிராஸ்டா (Renita Sophia Crasta) கூறினார்.

அது ஒரு சிறிய மாற்றமாக இருந்தாலும், ஒட்டுமொத்த வெளிநாட்டு ஊழியர்களுக்கும் அது பெரிய நம்பிக்கையை அளித்துள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த 18 மாதங்களாக, விடுதியிலேயே இருப்பது சுலபமில்லை. அதைக் கையாள, ஊழியர்கள் பலரும் அடிக்கடி தங்களது குடும்பத்தினரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டனர்.

அந்தக் கடினமான காலக்கட்டத்தின்போது, அரசாங்கமும் சில அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளும் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தன. உணவு வழங்குவது, மனநல ஆதரவு, இணையம் வழி நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.

எனினும், ஊழியர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக ரெனிட்டா கூறினார்.

அவர்களால் சமைக்க முடியவில்லை; விடுதியில் உள்ள அக்கம்பக்க புளோக்குகளில் உள்ளவர்களுடன் பழக முடியவில்லை; அதனால், ஊழியர்கள் சிலர் தனிமையில் வாடியதாக ரெனிட்டா குறிப்பிட்டார்.

இருப்பினும், ஊழியர்களுக்கான முன்னோடித் திட்டம், மகிழ்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.

சமூகத்தில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அது ஒரு நல்ல தொடக்கமாக வரவேற்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அது ஒரு நல்ல மாற்றமாக அமையும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்