'கொடுமையிலும் கொடுமை' - மகளுடன் சேர்ந்து மியன்மார் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியவருக்கு 14 ஆண்டுகள் சிறை

(TODAY, Facebook/Helping Hands for Migrant Workers, Singapore)
இல்லப் பணிப்பெண்ணைத் துன்புறுத்துவதற்கு மகளுக்கு உடந்தையாக இருந்த மாதுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரைச் சேர்ந்த பியாங் காய் டோன் (Piang Ngaih Don) என்ற 24 வயதுப் பணிப்பெண் 2016ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி மாண்டார்.
மூளையில் ஏற்பட்ட காயங்களாலும் கழுத்தில் ஏற்பட்ட பலத்த அடியாலும் அவர் மாண்டார்.
64 வயது பிரேமா S நாராயணசாமி தமது மகளான காயத்திரி முருகையனுடன் இணைந்து பணிப்பெண்ணைத் தொடர்ந்து 14 மாதங்களாகத் துன்புறுத்தினார்.
பிரேமாவின் செயல் கொடுமையிலும் கொடுமையானது என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.அதைக் கருத்தில் கொண்டு அவருக்கு 14 முதல் 16 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர்.
பணிப்பெண் மீது தண்ணீரை ஊற்றுவது, அவரை உதைப்பது, குத்துவது, அறைவது, கழுத்தைப் பிடித்து இழுப்பது போன்ற துன்புறுத்தல் செயல்களில் பிரேமா ஈடுபட்டார்.
அவர் பல்வேறு பொருள்களைக் கொண்டு பணிப்பெண்ணை அடித்ததாகவும் கூறப்பட்டது.
இல்லப் பணிப்பெண்ணுக்குப் போதிய உணவு அளிக்கப்படாததால் அவர் உடல் மெலிந்து 24 கிலோகிராம் எடையுடன் இருந்தார்.
அவர் இறந்ததற்குச் சில நாள்களுக்கு முன்பு, ஒரு சன்னலின் கம்பியில் இரவெல்லாம் கட்டப்பட்டார்.
அவ்வாறு ஜூலை 25ஆம் தேதி கட்டப்பட்ட பணிப்பெண் சுயநினைவை இழந்து மீண்டும் விழிக்கவில்லை.
மருத்துவருக்குத் தகவல் அளித்த தாயும் மகளும் நடந்ததைப் பற்றி பொய் உரைத்தனர். அவர்கள் பின்னர் கைதுசெய்யப்பட்டனர்.
2021ஆம் ஆண்டில் காயத்திரிக்கு 30 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்காலத்தைப் பாதியாகக் குறைக்கக் கோரி அவர் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பணிப்பெண் துன்புறுத்தல் வழக்குகளில் இது ஆக மோசமானது என்று கூறப்படுகிறது.