யீஷூனில் புதிய குருவாயூரப்பன் ஐயப்பன் ஆலயம்
(படம்: ஷரளா தேவி கோபால்)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் 20 ஆண்டுக்குப் பிறகு புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படவிருக்கிறது.
யீஷூன் அவென்யூ 3இல் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் விவரங்களை வெளியிட்டார்.
சிங்கப்பூரில் இடம்பெறவிருக்கும் 25ஆவது இந்து ஆலயம் அது.
சிங்கப்பூரில் இதற்கு முன் கட்டப்பட்ட கோவில் அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்.
2006ஆம் ஆண்டு செங்காங்கில் அது கட்டப்பட்டது.
இப்போது கட்டப்படவிருக்கும் புதிய கோவில் ஸ்ரீ குருவாயூரப்பன் ஐயப்பன் ஆலயம் என்று அழைக்கப்படும்.
தற்போதுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் அருகே அது அமையவிருக்கிறது.
"சிங்கப்பூர்க் கோவில்களைப் பார்த்தீர்கள் என்றால் குருவாயூரப்பனுக்கும் ஐயப்பனுக்கும் தனிப்பட்ட எந்த ஒரு கோயிலும் இல்லை" என்றார் திரு தினேஷ் வாசு தாஸ்.
சபரி மலைக்குப் புறப்படும் முன்னர் நேர்த்திக்கடனைச் செலுத்தி அதன் பிறகு சபரிமலைக்குச் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்த ஒரு வாய்ப்பை ஆலயம் கொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் தற்போதிருக்கும் ஆலயங்களிலிருந்து சற்று வேறுபட்டு பாரம்பரிய கேரளக் கட்டட பாணியில் ஸ்ரீ குருவாயூரப்பன் ஐயப்பன் ஆலயம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கோவிலில் இரண்டு பகுதிகள் இருக்கும்.
ஒன்று குருவாயூரப்பன், ஐயப்பன், விநாயகர், பகவதி கருவறைகள் கொண்ட வழிபாட்டுப் பகுதி.
இன்னொன்று 5-6 மாடிகளைக் கொண்ட கட்டடம்.
அதில் திருமண மண்டபமும், பல நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அறைகளும் இருக்கும்.
குறைந்த வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் திட்டங்கள், மாணவர்கள் படிப்பதற்கு ஆலய வளாகத்தில் இடம் முதலியன குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணிகள் எப்போது நிறைவடையும் என்று உறுதியாகத் தெரியவில்லை.
புதிதாகக் கட்டப்படவிருக்கும் ஆலயத்துக்கு அருகே கழக வீடுகளும் தொடக்கக் கல்லூரியும் உள்ளதால் கூடுமானவரை வட்டாரவாசிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பணிகளை முடிப்பதற்குத் திட்டமிடப்படுகிறது.