சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த உல்லாசக் கப்பலில் தீ - ஒருவர் மரணம்
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த உல்லாசக் கப்பலில் தீப்பிடித்தது.
சிப்பந்திகளில் ஒருவர் மாண்டதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்தது.
மற்ற சிப்பந்திகள், பயணிகள் யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.
கப்பலில் 388 சிப்பந்திகளும் 271 பயணிகளும் இருந்தனர்.
பயணிகளில் 139 பேர் சிங்கப்பூரர்கள்.
World Legacy எனும் அந்த உல்லாசக் கப்பல் லைபீரியாவில் (Liberia) பதிவு செய்யப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட தீ சற்று நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஆணையம் சொன்னது.
Raffles Reserved Anchorage எனும் இடத்தில் கப்பல் தற்போது நங்கூரமிட்டுள்ளது.
ஆணையத்தின் சுற்றுக்காவல் கலன்கள், கடலோரக் காவல்படை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை கப்பலின் உதவிக்குச் சென்றுள்ளன.
கப்பல் கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி முதல் பயணத்தைத் தொடங்க வேண்டியது. ஆனால் அதற்கு 2 நாள்களுக்கு முன்பாகப் பயணம் ரத்துசெய்யப்பட்டது.
கப்பலில் குழாய் நீர் பழுப்பு நிறத்தில் இருப்பதாகவும் மின்தூக்கிகள் சரியாக இயங்கவில்லை என்றும் குளிர்சாதனங்களில் பழுது இருப்பதாகவும் பயணிகள் புகாரளித்ததாக ஊடகங்கள் இதற்குமுன்னர் தகவல் வெளியிட்டன.
திருத்தம்: சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் (MPA) அளித்துள்ள அண்மையத் தகவல்களின்படி பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் திருத்தப்பட்டுள்ளன.