தலைசிறந்த திறனாளர்களை ஈர்க்க முனையும் வேலை அனுமதி - தலைசிறந்தவர்கள் என்றால் யார்யார்?
படம்: CNA/Gaya Chandramohan
தலைசிறந்த திறனாளர்களை ஈர்க்க வகைசெய்யும் வேலை அனுமதித் திட்டம் தலைசிறந்தவர்களை எப்படி அடையாளம் காணும்?
அது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்கின் அமைச்சர்நிலை அறிக்கையில் பதில் அளிக்கப்பட்டது.
- சம்பளத் தகுதி
மாதந்தோறும் ஒரு முதலாளியிடமிருந்து குறைந்தது 30,000 வெள்ளி சம்பளம் ஈட்டவேண்டும். தற்போதைய மேல்நிலை வேலை அனுமதியில் உள்ளவர்களில் சிறந்த 5 விழுக்காட்டினர் ஈட்டும் சம்பளத்துக்கு ஈடாக அது இருக்கும்.
வெளிநாட்டில் உள்ளோர் வேலை அனுமதிக்கு விண்ணப்பித்தால், அவர்களது முதலாளி குறைந்தது 500 மில்லியன் டாலர் மூலதனம் கொண்டிருக்கவேண்டும் அல்லது ஆண்டுதோறும் குறைந்தது 200 மில்லியன் டாலர் வருவாயைப் பெறவேண்டும்.
அல்லது
- தலைசிறந்த சாதனையாளர்கள்
கலை, விளையாட்டு, அறிவியல், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த திறனாளர்கள் சிங்கப்பூரர்களுக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.
உதாரணம்...
உலகத் தரவரிசையில் இடம்பெற்ற விளையாட்டாளர்கள் அல்லது முன்னாள் விளையாட்டாளர்கள். அவர்கள் உள்ளூர் அளவில் வர்த்தகச் செயல்பாடுகளையோ பயிற்சித் தளங்களையோ அமைக்க எண்ணலாம்.
திறனாளர்களை அடையாளம் காண துறை சார்ந்த அமைச்சுகளுடன் மனிதவள அமைச்சு பணியாற்றும் என்று டாக்டர் டான் கூறினார்.
- வேலை அனுமதி எப்படிப் புதுப்பிக்கப்படும்?
வேலை அனுமதி 5 ஆண்டுகள் நீடிக்கும்.
அவ்வேளையில் அமைச்சு திறனாளர்களுடன் தொடர்பில் இருக்கும். வேலை அனுமதியைப் புதுப்பிப்பதற்கு அவர்களின் நடவடிக்கைகளும் வருமானமும் கருத்தில் கொள்ளப்படும்.
வேலை அனுமதிக் கட்டமைப்பில் மாற்றங்கள்
அவர்கள் கலை, கலாசாரம், விளையாட்டு, ஆய்வு, கல்வி ஆகியவற்றில் தலைசிறந்த திறனாளர்களாக இருப்பர்.
அவர்களுக்கு வேலை அனுமதி 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். பொதுவாக மற்ற வேலை அனுமதி விண்ணப்பங்களுக்கு ஈராண்டு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
One Pass அனுமதி பெறுவோர், பல நிறுவனங்களுக்குப் பணிபுரியலாம் அல்லது சொந்தத் தொழில் தொடங்கலாம்.
அவர்களைச் சார்ந்திருப்போரும், அனுமதிக் கடிதம் பெற்று பணிபுரியலாம்.
திட்டம் 2023 ஜனவரி முதல் தேதி நடப்புக்கு வரும்.