17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞருக்கும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்துக்கும் என்ன தொடர்பு?
(படம்: இணையம், Google Maps)
This audio is generated by an AI tool.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் என்பது சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தில் உள்ளவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர்.
அதில் 'உமறுப்புலவர்' என்பவர் யார் என்று தெரியுமா?
இந்தியாவின் தமிழ்நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் உமறுப்புலவர்.
தமிழ் இஸ்லாமிய இலக்கியத்துக்கு வளம் சேர்த்த அவர் 'சீறாப்புராணம்', 'முதுமொழி மாலை' ஆகிய நூல்களை எழுதிப் புகழ்பெற்றவர்.
உமறு அல்லது உமர் என்று அழைக்கப்பட்ட அவருக்குப் புலவர் பட்டம் வழங்கப்பட்டதால் உமறுப்புலவரானார்.
1900களில் தமிழ்நாட்டின் கடையநல்லூர் வட்டாரத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தினர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தனர். அவர்களில் சிலர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பை உருவாக்கினர்.
தங்களது பிள்ளைகள் படிக்கச் சிறிய அளவில் வகுப்புகளை நடத்திய அவர்கள் 1946இல் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியை அமைத்தனர்.
உமறுப்புலவரின் புகழை எடுத்துக்கூறும் வகையில் பள்ளியின் பெயர் அமைந்தது.
1960இல் அது சிங்கப்பூரின் ஒரே தமிழ் உயர்நிலைப்பள்ளியாக உருவானது.
மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால் 1982இல் உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி மூடப்பட்டது.
உமறுப்புலவரின் பெயர் நிலைத்திருக்க விரும்பிய பள்ளியின் நிர்வாகம் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் S சந்திரதாஸின் உதவியை நாடியது.
செயிண்ட் ஜார்ஜஸ் ரோடு தமிழ்மொழி நிலையத்தின் பெயரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமாக மாற்ற அவர் கல்வியமைச்சிடம் பரிந்துரைத்தார்.
பரிந்துரையை ஏற்றுக்கொண்ட அமைச்சு பின்னர் பெயரை மாற்றியது.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் உருவானது.