நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்கள் செயல் கட்சி சிங்கப்பூரர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றவேண்டும் - பிரதமர் லீ
மக்கள் செயல் கட்சி நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்குச் சிங்கப்பூரர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

(படம்: NUS)
மக்கள் செயல் கட்சி நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்குச் சிங்கப்பூரர்களுடன் அணுக்கமாகப் பணியாற்றவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.
டாக்டர் சஷி ஜயகுமார் எழுதிய 'A History of the People's Action Party: 1985-2021' எனும் மக்கள் செயல் கட்சியின் வரலாற்றை எடுத்துரைக்கும் புத்தகத்தின் வெளியீட்டில் கலந்துகொண்டபோது அவர் அதனைக் கூறினார்.
நம்முடைய பணி வருங்காலத்தை முன்னுரைப்பது பற்றியதல்ல, அதனை உருவாக்குவதைப் பற்றியது. சிங்கப்பூரின் பாதுகாப்பு, நிலைத்தன்மை,செழிப்பு ஆகியவற்றுக்கு மக்கள் செயல் கட்சி தொடர்ந்து பாடுபடவேண்டும்,
என்று திரு. லீ கூறினார்.
புத்தகத்தில் மக்கள் செயல் கட்சி எதிர்கொண்ட பல திருப்பங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
1984-ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலின்போது கட்சியின் முன்னோடித் தலைவர்கள் பலர் ஓய்வுபெற்றனர்.
2020 பொதுத்தேர்தலுக்குப் பிறகு தற்போது இன்னொரு தலைமைத்துவ மாற்றம் இடம்பெறுவதைத் திரு. லீ சுட்டினார்.
பல்லாண்டு காலமாக, மக்கள் செயல் கட்சி எவ்வாறு 'தன்னைத் தொடர்ந்து புதுப்பித்து, மாற்றியமைத்துக் கொண்டுள்ளது என்பதை' நூல் விவரிப்பதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூர் இதுவரை அடைந்த அனைத்தும் எவ்வாறு சாத்தியமானது என்பதை வாசகர்கள் புத்தகம் வழி அறியலாம் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
முக்கியமாக, சிங்கப்பூருக்கு ஒளிமயமான வருங்காலத்தை ஏற்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறைத் தலைவர்கள், கட்சி ஆர்வலர்கள், சிங்கப்பூரர்கள் ஆகியோருக்கு ஊக்கமளிக்கலாம்,
என்று திரு. லீ சொன்னார்.