"ஆக்ஸ்லி ரோடு வீட்டை இடிக்கக் கோரிய லீ குவான் யூவின் விருப்பத்தை PAP அரசாங்கம் புறக்கணித்துள்ளது"
(படம்: Reuters/Edgar Su)
38 ஆக்ஸ்லி ரோடு வீடு இடிக்கப்படவேண்டும் என்று கோரிய முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் விருப்பத்தை மக்கள் செயல் கட்சியின் அரசாங்கம் புறக்கணித்துள்ளதாகத் திரு லீ சியன் யாங் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூவின் இளைய மகன் திரு லீ சியன் யாங்.
38 ஆக்ஸ்லி ரோடு வீட்டைத் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக அண்மையில் தகவல் வெளியானது.
அது குறித்து வீட்டின் உரிமையாளருக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இல்லத்தை நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றில் பங்குகள் வைத்துள்ள திரு லீ சியன் யாங், நிறுவனத்தின் சார்பில் அவரின் Facebook பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார்.
"வீட்டைத் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப் போவதாக அறிக்கை வெளியிட்டது, நாங்கள் வீட்டை இடிப்பதற்குச் சமர்ப்பித்த விண்ணப்பத்தை நிராகரிப்பதற்குச் சமம்," என்று பதிவில் கூறப்பட்டது.
38 ஆக்ஸ்லி ரோடு வீட்டை இடிப்பதற்குத் திரு லீ சியன் யாங் கடந்த ஆண்டு விண்ணப்பித்தார்.
இல்லத்தைத் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கமுடியுமா என்பது குறித்து தேசிய மரபுடைமைக் கழகம் அப்போது ஆராயத் தொடங்கியதால் விண்ணப்பத்தின் முடிவு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 38 ஆக்ஸ்லி ரோடு தேசிய நினைவுச்சின்னமாகப் பராமரிக்கப்படுவதற்கான மதிப்பைக் கொண்டது என்று நிர்ணயித்துள்ளதாகக் கழகம் கூறியுள்ளது.
இல்லத்தைத் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வீட்டு நிர்வாக நிறுவனத்துக்கு 2 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.