சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி பெரிதாகப் பேசுவதில்லை: பிரதமர் வோங்
(படம்: CNA/Wallace Woon)
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி பெரிதாகப் பேசுவதில்லை என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.
சிக்கல்களைச் சமாளிப்பது இறுதியில் மக்கள் செயல் கட்சியின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
பத்தாண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட மதிய வேளை பிரசாரக்கூட்டத்தில் மக்கள் செயல் கட்சி (PAP) வேட்பாளர்கள் உரையாற்றினர்.
மக்கள் செயல் கட்சி UOB பிளாஸா ஸ்குவேரில் நடத்திய கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கட்சியின் சார்பில் ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் போட்டியிடும் டேவிட் ஹோ அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
"பலர் நான் தேர்தலில் போட்டியிடத் தகுதியுடையவரா என்று கேள்வி எழுப்பினர். திறமைகளை வளர்த்துக்கொண்டு மேலும் அயராது உழைப்பேன், அனைவருக்கும் சேவையாற்றுவேன்," என்றார் அவர்.
மாறிவரும் உலகில் ஊழியர்கள் பல சவால்களைச் சந்திப்பதாக அல்ஜூனிட் குழுத்தொகுதியில் நிற்கும் ஜகதீஸ்வரன் ராஜூ பகிர்ந்தார்.
அமெரிக்கா சிங்கப்பூர் மீது விதித்திருக்கும் வரிகளைச் சமாளிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழுவை வழிநடத்தும் துணைப்பிரதமர் கான் கிம் யோங் பற்றியும் அவர் பேசினார்.
மாறிவரும் உலகைக் கண்டு அஞ்சவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட திரு வோங் மக்கள் செயல் கட்சி, மக்களுடன் இறுதிவரை பயணம் செய்யும் என்று உறுதியளித்தார்.