சிங்கப்பூர் exclusive
"புதிய வேலையா? வருத்தத்தைத் தவிர்க்க ஒப்பந்தத்தைப் படியுங்கள்"
Envato Elements
எந்த வேலையில் சேர்ந்தாலும், வேலை ஒப்பந்தத்தை ஒழுங்காகப் படிப்பது மிகவும் முக்கியம் என்று மனிதவள நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
சிங்கப்பூரில் இணைய வர்த்தகத் தளத்தை நடத்தும் Lazada நிறுவனத்தில் சுமார் 100 ஊழியர்கள் அண்மையில் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
ஊழியர்கள் ஓராண்டுகாலம் போட்டி நிறுவனத்தில் வேலைக்குச் சேரமுடியாது என்று அவர்களுடைய வேலை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
வேலையில் இல்லாதபோதும் இவ்வாறு இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்வதற்குத் தடை விதிக்கமுடியுமா?
எல்லா நிறுவனங்களிலும் இந்த நிபந்தனை இல்லை.
விற்பனை நிறுவன ஊழியர்கள், மூத்த பொறுப்புகளில் இருப்போர், குறிப்பிட்ட சில பணியில் உள்ளவர்கள் ஆகியோருக்கு இத்தகைய தடை விதிக்கப்படலாம் என்றார் Stravan Search ஆள்சேர்க்கும் நிறுவனத்தின் இயக்குநர் திரு அலன் வள்ளியப்பன்.
ஏன் இத்தகைய நிபந்தனை?
"தொழில் ரகசியம், தகவல்கள், குறிப்பிட்ட செயல்முறைகள் போன்றவை மற்ற நிறுவனங்களுக்குக் கசிந்துவிடக் கூடாது. அதை உறுதிசெய்யவே இந்தத் தடை," என்றார் அவர்.
வேலை ஒப்பந்தத்தில் ஊழியர்கள் எவ்வளவு நாள் போட்டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர முடியாது என்று கூறப்பட்டிருக்கும்.
--வர்த்தகங்கள் குறிப்பிட்ட திட்டங்களில் (Projects) ஈடுபட்டிருக்கலாம். திட்டங்கள் எவ்வளவு பெரியவை, அதை எந்த அளவுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியவை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்று திரு அலன் சொன்னார்.
இந்த நிபந்தனை புதிய வேலை தேடுவதை சிரமமாக்கலாம்.
புதிய வழிகாட்டி ஏன் அவசியம்?
இதற்கு வழிகாட்டிமுறை ஒன்றை வெளியிடவிருப்பதாக மனிதவள அமைச்சு நேற்று கூறியுள்ளது.
"செயல்முறை அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுகுவதற்கு வழிகாட்டிகள் மிகவும் முக்கியம்."
"சிங்கப்பூரில் திறன் அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. ஒரு துறையில் திறன் பெற்றவர் மற்றொரு துறையில் எளிதாகச் சேரமுடியாது. அவரைப் பாதுகாப்பது முக்கியம்," என்று திரு ஆலன் கூறினார்.
'Garden Leave' - அப்படியென்றால்?
தொழில் ரகசியத்தைப் பாதுகாக்க ஊழியர்களின் வேலை ஒப்பந்தத்தில் 'Garden Leave' எனும் நிபந்தனையும் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
அந்த நிபந்தனை இருந்தால் 'Notice period' எனும் பொறுப்புகளை ஒப்படைக்கும் காலத்தில் ஊழியர்கள் விடுப்பில் அனுப்பப்படலாம்.
அவர்களுக்குச் சம்பளம் கிடைக்கும்...ஆனால் வேலை செய்யமுடியாது.
ஊழியர்கள் நிறுவனத்தின் தகவல்களைப் பகிராமல் இருப்பதை அது உறுதிசெய்யும்...அவர்கள் போட்டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதையும் தடுக்கும்.
'வேலை ஒப்பந்தத்தை ஒழுங்காகப் படியுங்கள்'
வேலையில் புதிதாகச் சேரும் முன் ஒப்பந்தத்தில் சம்பளம், வருடாந்தர விடுப்பு நாள்கள், மருத்துவ விடுப்பு, அனுகூலம் ஆகியவற்றை மட்டும் பார்க்கக் கூடாது என்றார் திரு அலன்.
"ஒப்பந்தத்தில் மற்ற நிபந்தனைகள் இருக்கும். அவற்றைப் பின்பற்றவில்லை என்றால் சட்ட நடவடிக்கை கூட எடுக்கமுடியும். " என்பதை அவர் வலியுறுத்தினார்.
வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்...
- ஒப்பந்தத்தை ஆழ்ந்து படிப்பது சிறந்தது
- கேள்விகள் அனைத்தையும் ஆள் சேர்க்கும் நிபுணரிடம் கேட்கலாம்.
- தேவைப்பட்டால் பேரம் பேசலாம்.
-சிலவற்றுக்குப் பேரம் பேச முடியாது. அவற்றை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று யோசிக்க வேண்டும்.
-ஏற்றுக்கொள்ள முடிந்தால் மட்டுமே வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.