Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

இந்தியா- சிங்கப்பூர் இடையில் பணம் அனுப்ப PayNow-UPI வசதி -"செல்லும் இடங்களில் எல்லாம் இருந்தால் சிறப்பு"

வாசிப்புநேரம் -

PayNow-UPI ஒருங்கிணைப்புச் சேவை வழி சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கும் இனி உடனடியாக பணம் அனுப்பலாம்.

வணிகம், பொருள் வாங்கச் செல்வது, புனித யாத்திரை - இப்படி அடிக்கடி இந்தியா செல்லும் சிங்கப்பூரர்கள் சிலரிடம் பேசியது 'செய்தி.

சொந்தத் தேவைக்கு சௌகர்யம்

அவர்களில் ஒருவர் Amy's Cart எனும் இணையம் வழி வணிகம் நடத்தி வரும் திருமதி. அனிதா.

"சிங்கப்பூர் - இந்தியா இடையே எனது பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் இப்போதைக்கு வங்கி வாயிலாகத்தான் நடக்கின்றன.
புதிய சேவை வணிகர்களின் தேவையைப் பூர்த்திசெய்யுமா என்பது தெரியவில்லை. சொந்தத் தேவைக்கு சௌகர்யம் தான்,"

என்றார் அவர்.

அவரைப் போலவே இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் துணிமணிகள், வெள்ளிப் பாத்திரங்கள், பரிசுப்பொருள்கள் முதலியவற்றை விற்பனை செய்துவரும் திருமதி ரெங்கநாதன் தேவி, Western Union சேவையைப் பயன்படுத்திவருவதாகச் சொன்னார். அது நம்பகமான சேவை என்றாலும், PayNow-UPI சேவை அளவுக்கு எளிதாக இருக்காது என்றார்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளின் தேவையையும் PayNow-UPI சேவை இனி எளிதாக்கும் என்கிறார் Greenleaf Cafe நடத்துநர் திரு. கலைச்செல்வன்.

"வணிக நடவடிக்கைகளுக்கு நான் வங்கிக் கணக்கு வாயிலாகத்தான் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வேன். அவ்வப்போது இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சுற்றுப்பயணிகளை அழைத்து வருவதுண்டு. அவர்கள் இனி ரொக்கப் பணத்தைக் கையில் கொண்டு வர வேண்டியிருக்காது."

அலைச்சல், ஆபத்து குறைவு

இருப்பினும், இந்தச் சேவையை இந்தியாவில் எத்தனை இடங்களில் பயன்படுத்த முடியும் என்று தெரியவில்லை என்று அக்கறை தெரிவித்தனர் சிலர்.

"ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட PayWave வசதி இந்தியாவில் முழுமையாகக் கிடைப்பதில்லை. PayNow-UPI வசதியும் அப்படி இருக்குமோ என்ற எண்ணம் உள்ளது. செல்லும் அனைத்து இடங்களிலும் அந்த வசதி இருந்தால் சிறப்பு,"
எனக் கூறினார் திருமதி.கல்யாணி.

இந்தியாவுக்குப் பொருள்கள் வாங்கச் செல்லும்போது அதிகமாகப் பணம் எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கும் என்று நினைக்கும் திருமதி நளினி போன்றோர், சேவையால் நல்ல பலன் இருக்கும் என்கின்றனர்.

"முடிந்தவரை முன்னேற்பாடுகளுடன் தான் செல்வோம்.
தேவைப்பட்டால் இச்சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்," என்றார் திருமதி நளினி.

புனித யாத்திரைக்காக இந்தியாவுக்குச் செல்லும் திருமதி. யோகேஸ்வரி, தேவைகளைப் பிறர் உதவியின்றி சொந்தமாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிங்கப்பூரிலுள்ள DBS வங்கி, Liquid Group நிதித்தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள் கட்டங்கட்டமாக இந்த PayNow வசதியைப் பயன்படுத்தலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்