Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

பேசுவோமா: அன்பு மட்டும் போதுமா?

வாசிப்புநேரம் -

கண்ணில்படும் அழகிய காட்சிகளைப் படமாக்குவதில் அதிக ஆர்வம்! கடல் கன்னிகள் மீதோ ஏதோ ஒரு மோகம்! பரபரப்பிலிருந்து தப்பிக்க நான் நாடுவது என் கற்பனை உலகம்!

அபிடா பேகம்

பாசம், நேசம், அன்பு, காதல்...

இப்படி பல சொற்களில் அந்த அழகிய உணர்வை வருணிக்கலாம்...

அன்பை அழகாகக் காட்டுவதற்குத் தான் எத்தனை வழிகள்...

பரிசுகள் அள்ளிக்கொடுத்தால்தான் நேசம் வெளிப்படும் என்பதில்லை..

‘இன்றைய பொழுது உங்களுக்கு நன்றாய் அமையட்டும்.’

'நேரத்தோடு சாப்பிடவும்...'

இதுபோன்ற அக்கறைமிக்க சொற்களாலும் பாசத்தைக் காட்டலாம்.

ஆனால், ஓர் உறவு வளர, வலுப்பெற அன்பு மட்டுமே போதுமானதா?

உணர்வுகளுக்கு மரியாதையும் முக்கியமல்லவா?
திருமணமாகி 50 ஆண்டுகளுக்கும் மேலான தாத்தா பாட்டியிடம் ஒருமுறை கேட்டேன்... இத்தனை ஆண்டுகள் அவர்களின் பந்தம் நிலைத்திருக்கக் காரணம் அன்பு மட்டுமா என்று.

அதற்கு அவ்விருவரின் அழகிய பதில்...

சுயமரியாதை இருவருக்குமே இருக்கிறது என்பதைப் புரிந்து நடக்க வேண்டும்.

ஒருவரிடத்தில் நம் சொல்லுக்கு மதிப்புண்டு என்ற நினைப்பு ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.

உறவுக்கான அஸ்திவாரத்தை அது பலமாக்குகிறது.

ஒருவரின் அன்பைப் பெற  முதலில் என்னென்ன முயற்சிகள் செய்தோமோ அவற்றைப் பிற்காலத்திலும் தொடர்ந்து செய்வது முக்கியம்.

விலைமிக்க பூச்செண்டு தேவையில்லை.. பிடித்த மிட்டாய் ஏதேனும் வாங்கிக்கொடுத்தால்கூட அன்றைய தினம் தித்திப்பாய் அமையும்.

எதிர்பார்ப்புகள் கூடும்போது சில வேளைகளில் அன்பு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. விட்டுக்கொடுக்கும் மனப்போக்கு கைகொடுக்கும்.

வாக்குவாதம் எதுவாயினும் அன்றைய தினத்துக்குள் தீர்வுகாணவேண்டும். 

இருவரும் ஓர் அணி என்பதை ஆணித்தரமாக நம்ப வேண்டும். வேறுபாடுகளை முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

அகம்பாவத்துக்கு இடம்கொடுத்தால் அங்கு அன்புக்கு இடமின்றிப் போய்விடும்.

பாதுகாப்பாக எவரிடம் உணர்கிறோமோ பெரும்பாலும் அவரையே நாம் அதிகம் நாடிச் செல்வோம். 

பாசத்தைப் பணயம் வைத்து ஒருவரை அலட்சியப்படுத்துதல் தவறு என்பதைச் சிறுவயதிலேயே வலியுறுத்த வேண்டும்.

அன்பானவர், அழகானவர்,  ஆற்றல் மிக்கவர் என நமக்குப் பிடித்தவர்களை வருணிப்போம்.

அவற்றோடு, "என் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர், 
எனக்காக நேரத்தை ஒதுக்குபவர், என்மீது அக்கறை கொண்டவர், எனக்கு முன்னுரிமை அளிப்பவர்” என்று கூறுபவர்களுக்கு இடையில் அன்பு, காதல், பாசம், நேசம் ஆகியவை நீடித்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் காதல் கைபேசிக்குள்ளேயே கண்ணாம்பூச்சி ஆடுகிறது.

ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துப் பேசினால்தானே அன்பு ஆழமாகும்.

அன்பு மட்டும் போதுமா என்று  உங்களுக்கானவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

அவர்களின் பதில் உங்கள் பந்தம் வலுப்படக் கண்டிப்பாக உதவும்.

அன்புடன்,

அபிடா பேகம்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்