பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள ஆசியாவில் புதிய கூட்டணி
படம்: CNA
பருவநிலை மாற்றத்தைச் சமாளித்து, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை ஊக்குவிக்க சிங்கப்பூரில் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.
அதில் 50 நாடுகளைச் சேர்ந்த 3,000க்கும் அதிகமானோர் கொடை அமைப்புகள், வர்த்தகங்கள், அரசாங்கங்கள் போன்றவற்றைப் பிரதிநிதிக்கின்றனர்.
ஆசியக் கொடை உச்சநிலை மாநாடு தொழில்நுட்பமும் துறைகளுக்கு இடையிலான பங்காளித்துவமும் சமூக முன்னேற்றத்துக்கு எவ்வாறு புத்தாக்கமான தீர்வுகளை உண்டாக்கலாம் என்பதில் கவனம் செலுத்துகிறது.
அறிவியல் ஆராய்ச்சியோடு நிதியாதரவை ஒருங்கிணைக்க இவ்வாண்டு Philanthropy Asia Alliance எனும் புதிய அனைத்துலகக் கூட்டணி அமைக்கப்பட்டது.
டெங்கி, மலேரியா போன்ற கொசுக்களால் ஏற்படக்கூடிய நோய்கள் தொடர்பான சவால்களை அது கையாளும்.
இந்த வட்டாரம் சவால்களைச் சமாளிக்க மேலும் பல துறைகளில் ஒன்றுகூடிப் பணியாற்றுவது அவசியம் என்று அந்தக் கூட்டணி கூறுகிறது.
பருவநிலையால் ஏற்படக்கூடிய நோய்கள் அதிகரிப்பதால் அவற்றைக் கையாளக் கூடுதல் கூட்டு முயற்சி தேவை என்று அது குறிப்பிட்டது.
அந்தக் கூட்டணி வெறும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஷான் சியாவ் (Shaun Seow) சொன்னார்.
ஆண்டுதோறும் திட்டங்களை அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டுசென்று அரசாங்கங்கள், முதலீட்டாளர்கள் எனப் பலரின் ஆதரவையும் திரட்டுவது இலக்கு என்றார் அவர்.