'அவர் என்னுடைய தாயார் மட்டுமல்ல...என்னுடைய குரு' - காலஞ்சென்ற முன்னோடிக் கலைஞர் மனுநீதிவதியின் மகள் விக்னேஸ்வரி
சிங்கப்பூரில் தாள வாத்தியக் கருவிகளை வாசித்த முன்னோடிப் பெண்களில் ஒருவரான திருமதி மனுநீதிவதி முத்துசாமி, கடந்த வியாழக்கிழமை (9 டிசம்பர்) காலமானார்.

சிங்கப்பூரில் தாள வாத்தியக் கருவிகளை வாசித்த முன்னோடிப் பெண்களில் ஒருவரான திருமதி மனுநீதிவதி முத்துசாமி, கடந்த வியாழக்கிழமை (9 டிசம்பர்) காலமானார்.
அவருக்கு வயது 88.
அவர் என்னுடைய தாயார் மட்டுமல்ல...என்னுடைய குரு,
என்று கூறினார், திருமதி மனுநீதிவதியின் மகள் திருமதி விக்னேஸ்வரி வடிவழகன்.
சிங்கப்பூரில், 1933ஆம் ஆண்டில் பிறந்த திருமதி மனுநீதிவதி, சிறு வயதிலிருந்தே வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவிகள் எனப் பல்வேறு கலைகளில் நாட்டம் கொண்டவர்.

அவர் 1970கள் வரை, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்துகொண்டதுண்டு.
வட இந்திய,தென்னிந்திய இசையில் நிபுணத்துவம் பெற்ற திருமதி மனுநீதிவதி, பல்வேறு படைப்புகளுக்கும் இசையமைத்தார்.
சிங்கப்பூரில், தாள வாத்தியக் கருவிகளைப் பெண்கள் அவ்வளவாக வாசிக்காத காலக்கட்டத்தில், தபேலா, மிருதங்கம் போன்ற கருவிகளை வாசிக்கத் தொடங்கினார் அவர்.
அதனாலேயே, தமது உறவினர் இசைக்கலைஞர் ராதா ராஜா அமைத்த ஓர் இசைக் குழுவுக்கு 'Ladies Orchestra' என்று பெயர் சூட்டப்பட்டதாகத் திருமதி விக்னேஸ்வரி கூறினார்.
பெண் இசைக் கலைஞர்கள் மட்டுமே கொண்ட அந்த இசைக்குழுவில் ஈடுபட்டது, தாயாருக்கு மிகவும் பெருமிதம் அளித்ததாக அவர் சொன்னார்.
திருமதி மனுநீதிவதி, ராமகிருஷ்ண சங்கீத சபா, டாக்டர் சோட்டா சிங் இசைக் குழு ஆகியவற்றிலும் கலந்துகொண்டதுடன், பயிற்றுவிப்பாளராகவும் செயல்பட்டார்.

கலையில் ஊறியிருந்த தாயாரைப் பார்த்து வளர்ந்த திருமதி விக்னேஸ்வரி, தாமும் தம்முடைய வாழ்க்கையைக் கலைக்கு அர்ப்பணிக்க முடிவெடுத்தார்.
என்னுடைய பதின்ம வயதுப் பருவத்திலிருந்து, 1990கள் வரை, நான் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் படைப்புகளுக்கும் தாயார் வருவார். எவ்வளவு நேரம் எடுத்தாலும், நிகழ்ச்சி முடியும்வரை என்னுடன் இருப்பார்,
என்று அவர் சொன்னார்.
ஓய்வுபெற்ற திருமதி மனுநீதிவதி, பின்னர் பல இசை வகுப்புகளை நடத்தினார். அவர் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் வகுப்பு நடத்தியதாகக் கூறப்பட்டது.

தாயாருடன் இணைந்து பல இசை வகுப்புகளை நடத்தியதைத் திருமதி விக்னேஸ்வரி நினைவுகூர்ந்தார்.
"வெளிநாட்டிற்குச் சென்று இசையைப் பயிலும் போக்கு நிலவிய காலத்தில், உள்ளூர் அளவில் கலைத் துறையை நிலைநாட்டச் செய்யவேண்டும்... குறைந்த வருமானக் குடும்பங்களிலிருந்து வருவோரில் இசையில் நாட்டம் கொண்ட பிள்ளைகளுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என அவர் எண்ணினார்," என்று திருமதி விக்னேஸ்வரி சொன்னார்.
திருமதி மனுநீதிவதியின் இறுதிச் சடங்கு இன்று (12 டிசம்பர்) மாலை நடைபெற்றது.