சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
பொங்கலை ஒட்டி மிக அதிகமாக ஏற்றம் கண்டிருக்கும் பூ விலை

சிங்கப்பூரில் பூக்களின் விலை மிக அதிகமாய் ஏற்றம் கண்டிருப்பதாகப் பூ வியாபாரிகளும் பொதுமக்களும் 'செய்தி'யிடம் தெரிவித்துள்ளனர்.
நாளை (14 ஜனவரி) பொங்கல் திருநாள்.
பொதுவாகப் பொங்கலுக்கு முதல் நாள், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்து, வாழை இலை, வெற்றிலை, வாழைப்பழம், பூ ஆகியவற்றுக்கான தேவை அதிகரிக்கும்.

அதனால் வியாபாரிகளும் அதைக் கூடுதலாக வரவழைத்து வாடிக்கையாளர்களின் தேவையை ஈடுசெய்வர்.
பூ, வாழைப்பழம் போன்ற பொருள்களின் விலையும் பொதுவாக மற்ற நாள்களைவிடச் சற்று அதிகமாகவே இருக்கும்.
சென்ற ஈராண்டுகளாக COVID-19 சூழலால், பூக்கள் தருவிக்கப்படுவதில் சிரமம் நிலவுகிறது.
இந்தியாவைத் தாண்டி, தாய்லந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் பூக்கள் தருவிக்கப்படுகின்றன.
ஆனால் இவ்வாண்டு நிலைமை இன்னும் மோசம் என்கின்றனர் பூ வியாபாரிகள்.
உதிரிப்பூ கிலோ 15 வெள்ளி என்ற அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
கட்டி விற்கப்படும் மல்லிகையின் விலையும் ஒரு முழம் சுமார் 3 இலிருந்து 3.50 வெள்ளி.
இதனால் பூக்களை மிகக் குறைந்த அளவில் வாங்கவிருப்பதாய்ச் 'செய்தி'யிடம் பேசிய சிலர் தெரிவித்தனர்.
காய்கறிகளின் விலை அதிகரிப்பு ஒருபுறம் இருக்க, பூக்கள் போன்றவற்றின் விலையும் இவ்வளவு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாய் அவர்கள் கூறினர்.
ஆனால் வேறு சிலரோ, பொங்கல் போன்ற பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறையே வருவதால், செலவைக் கண்டுகொள்ளப்போவதில்லை என்றும் கூறினர்.
மேலும் சிலர், தீபாவளியுடன் ஒப்பிடும்போது பொங்கலுக்கு ஆகும் செலவு மிகவும் குறைவு என்பதையும் குறிப்பிட்டனர்.

பூக்களைக் கொண்டு அலங்கரித்தால் மட்டுமே அந்தச் சிறப்பை உணரமுடியும் என்பது அவர்களின் கருத்து.
வியாபாரிகளில் அதிகமானோர் மும்முரமான வேலைக்கு இடையில் பேசினர்.
வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாமல் சிரமப்படுவதாக ஓம் சக்தி பூக்கடை தெரிவித்தது
விலையோ அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். அதனால் எங்கள் லாபத்தைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு முடிந்தவரை நிறைவான சேவையை வழங்க முற்படுகிறோம்.
என்றனர் பூக்கடைக்காரர்கள்.
இந்தியப் பண்டிகைகளில் பூக்களுக்கு முக்கிய இடம் உண்டு என்பதால், செலவைப் பார்க்காமல் நிறைவைப் பார்க்கவேண்டும் என்கின்றனர் பண்டிகை உணர்வில் திளைத்திருக்கும் மக்கள்.