Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

‘பொன்னியின் செல்வன்’- திரைப்படம் வெளியான பிறகு அதிகமாக விற்பனையாகும் புத்தகங்கள்

வாசிப்புநேரம் -

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உலகளவில் இளையர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஒரு வரலாற்றுப் புதினத்தை  அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்துக்குக் கிடைத்திருக்கும் ஆதரவைப் பலரும் வியந்து பாராட்டுகின்றனர். 

புத்தகங்களின் விற்பனை 

திரைப்படம் வெளியான பின் 'பொன்னியின் செல்வன்' புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளதா என்பதை ஆராய 'செய்தி' புத்தகக் கடைகள் சிலவற்றுடன் பேசியது. 

Tekka 777 Tamil Books and Pooja Store கடையை நிர்வகிக்கும் ரஞ்சித் 'பொன்னியின் செல்வன்' புத்தகங்களைத் தமிழ், ஆங்கிலம், காமிக்ஸ் வடிவங்களில் விற்பனை செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.  

திரைப்படம் வெளியான பின்னர், புத்தகத் தொகுப்பின் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.  

படம் வெளியாவதற்கு முன்னர்:

-மாதத்திற்கு சுமார் 15 தொகுப்புகள்

படம் வெளியான பின்னர்:

-இது வரை 100 தொகுப்புகள்

Tamilwithlove இணைய விற்பனையின் நிறுவனர் தீபா 'பொன்னியின் செல்வன்' புத்தகங்களின் விற்பனை சுமார் 4 மடங்கு அதிகரித்திருப்பதாகச் சொன்னார். 

"வாசகர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய பல வெளியீட்டாளர்களை நாடுகிறோம். தற்போது நிறைய இளையர்கள் புத்தகத்தை வாசிக்கின்றனர்.  தமிழில் படிக்க சிரமப்படுவோர் நாவலை ஆங்கில வடிவத்தில் வாங்கிப்  படிக்கின்றனர்.  சிறார்கள் காமிக்ஸ் வடிவத்தைப் படிக்க ஊக்குவிக்கிறோம்,"

என்றார் தீபா. 

'பொன்னியின் செல்வன்' புத்தகங்கள் குறித்து அதிகமானோர் விசாரிப்பதாக ராஜி பப்லிகேஷனைச் (Raji Publications) சேர்ந்த  சூரிய ரத்னாவும் தெரிவித்தார். 

தற்போது அமசான் தளத்தில் (Amazon) பிரபலமாக விற்பனையாகும் புத்தகங்களின் பட்டியலில் 'பொன்னியின் செல்வன்'  இடம்பெற்றிருப்பதையும் பார்க்க முடிகிறது. 

(படம்: Amazon Screenshot)

ஊடகங்களின் தாக்கமும் திரைப்படம் ஏற்படுத்திய ஆர்வமும் புத்தக விற்பனை அதிகரிக்கப் பெரும் பங்கு வகித்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

ஏன் இந்தத் திடீர் ஆர்வம்?  

தமிழ் படித்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட சில இளையர்கள் நாவலை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

"படம் சுவாரஸ்யமாக இருந்தது. கதையை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்குப் புத்தகத்தை முன்கூட்டியே படித்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும் என்று தோன்றியது. இனிப் புத்தகத்தை வாங்கி படிக்கவிருக்கிறேன்,"

என்றார் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் இளையரான தக்க்ஷாயனி.

சிங்கப்பூர் தேசியப் பல்கழைக்கழகத்தில் பயிலும் சரண்யாவும் தமது தமிழார்வம் தூண்டப்பட்டிருப்பதாகச் சொன்னார். 

"தமிழில் புத்தகம் படிப்பது சிரமமாகத் தான் உள்ளது. ஆனால், திரைப்படம் பார்த்த பின்னர் அது என் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது,"

என்றார். 

வாசிப்பில் கேட்பவர்கள்

நேரப் பற்றாக்குறையின் காரணமாக 'Storytel' அல்லது 'Spotify' மூலம் புத்தகத்தை வாசிப்பில் கேட்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதிலும் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை என்றார் ஆசிரியராகப் பணிபுரியும் ஷர்மிலா பேகம். 

"எனக்குத் திரைப்படம் பார்த்ததும் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசை  ஏற்பட்டது.  'Spotify' மூலம் வாசிப்பில் கேட்க ஆரம்பித்தேன். கல்கியின் எழுத்து என்னைச் சுண்டி இழுத்தது. 

புத்தகம் படிப்பது போன்று வருமா என்றெண்ணி நான் நாவலையும் தற்போது படிக்கிறேன்,"

என்றார் அவர். 

மொத்தத்தில் திரைப்படத்தின் தாக்கத்தால் அதிகரித்திருக்கும் தமிழ்ப் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் இனியும் தொடரும் என்பது பலரின் நம்பிக்கை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்