ஒடிஷாவுக்குப் பயணம் மேற்கொண்ட அதிபர் தர்மனுக்குச் சிறப்பு வரவேற்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் இன்று ஒடிஷா மாநிலத்துக்குச் சென்றுள்ளார்.
அவர் இன்றும் நாளையும் ஒடிஷாவில் இருப்பார்.
ஒடிஷாவில் இருக்கும் செய்தியாளர் மீனா ஆறுமுகம் அதன் தொடர்பிலான விவரங்களைத் தந்தார்.
அதிபர் தர்மன் இன்று காலை ஒடிஷா தலைநகர் புவனேஷ்வர் நகரைச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. ஒடிஷா மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அவரை வரவேற்றார்.
புவனேஷ்வர் நகரின் பல இடங்களில் அதிபர் தர்மனை வரவேற்கப் பெரிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நாளிதழ்களிலும், தொலைக்காட்சி ஒளிவழிகளிலும் அதிபரை வரவேற்கும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
மதியம் திரு தர்மன் திரு மாஜியுடன் பேச்சு நடத்துவார்.
திரு தர்மன் புவனேஷ்வரில் உள்ள உலகத் திறன்கள் நிலையத்தைப் பார்வையிடவிருக்கிறார். நிலையம் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கல்விச் சேவைப் பிரிவால் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவரும் மாநிலங்களில் ஒன்றான ஒடிஷா, தொழில்துறைகளை மேம்படுத்த விரும்புகிறது; திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
அதற்காக இம்மாத இறுதியில் அது ஏற்பாடு செய்திருக்கும் ‘உத்கர்ஷ் ஒடிஷா’ முதலீட்டாளர் மாநாட்டை அது மிகப்பெரிய அளவில் முன்னிறுத்த விரும்புகிறது, நகரிலும் விமான நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் அதைப் பார்க்க முடிந்ததாக எங்கள் செய்தியாளர் மீனா ஆறுமுகம் தெரிவித்தார்.