சிங்கப்பூர் exclusive
மீன், இறைச்சி, கோழி விலை மேலும் உயருமா?
படம்: இம்ரான்
This audio is generated by an AI tool.
மத்திய கிழக்கில் கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வரும் போர் உலகளாவிய எண்ணெய் விலையேற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
இதனால் மளிகைப் பொருள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சாமன் மீன்: இறக்குமதிச் செலவு அதிகரிப்பு
கடல் உணவு வகைகளில், குறிப்பாக சாமன் (Salmon) மீனின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
முன்பு ஒரு கிலோ 35 வெள்ளி.
இப்போது 38 முதல் 40 வெள்ளி.
“சாமன் மீன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. போரினால் விமானக் கட்டணம் அதிகரித்துள்ளது. இறக்குமதியாளராக இருப்பதால் என்னால் இன்னமும் மீனின் விலையைக் கட்டுப்படியாக வைத்துக்கொள்ள முடிகிறது,” என்று மீன் உரிமையாளர் கோகுலபாலன் கூறினார்.
இறைச்சி விலை: டாலர் மதிப்பின் தாக்கம்
உறைய வைக்கப்படாத இறைச்சியின் விலையும் ஏறியுள்ளது.
முன்பு கிலோவுக்கு 26 முதல் 32 வெள்ளி. இப்போது 28 முதல் 34 வெள்ளி.
இரண்டு மாதங்களுக்கு முன்பே விலையை உயர்த்தி விட்டதாக இறைச்சிக் கடை உரிமையாளர் பி விஜயராகவன் தெரிவித்தார்.
அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததால், விநியோகிப்பாளர்களிடம் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
போர் காரணமாக அடுத்து விலை மாற்றம் ஏற்படலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
கோழி விலை: ரிங்கிட் மதிப்பில் மாற்றம்
மலேசிய ரிங்கிட் வலுவடைந்ததால் விலை ஏறியதாக கோழிக் கடை உரிமையாளர் அப்துல் ரஷித் சொன்னார்.
தொடக்கத்தில் ஒரு கிலோ கோழி 10 வெள்ளிக்கு விற்கப்பட்டது.
தற்போது அது 50 காசு கூடி 10.50 வெள்ளி. மார்ச் முதல் தேதி மொத்த வியாபாரிகள் விலையை உயர்த்தியதாக அவர் சொன்னார்.
இன்றைய நிலை நாளை மாறலாம்…
எண்ணெய் விலை ஏறுகிறது, இறங்குகிறது. அது பொருள்களின் விலையைப் பாதிக்கிறது.
விலை உயர்வைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனால் சூழ்நிலை கை மீறினால் விலை உயர்வைக் தவிர்க்க முடியாது என்றனர் கடைக்காரர்கள்.