சிங்கப்பூர் exclusive
"இருப்பது இதுதான், இதை வைத்து என்ன செய்ய முடியுமோ செய்வேன்" - நோய் கற்றுக்கொடுத்த பாடம்
This audio is generated by an AI tool.
"24 மணிநேரமும் வலி.. அதுதான் வாழ்க்கை, என்ன செய்வது?"
அதைக்கூட உற்சாகத்துடன் சொல்கிறார் பிரிவீன் ராஜ் நாயுடு.
'செய்தி' அவரைச் சந்தித்தபோது, குளிரூட்டப்பட்ட அறையில் அவருக்கு வியர்த்தது. கை கால்களை அவ்வப்போது ஆட்டியபடி இருந்தார்.
காரணம்....வலி!
வழக்கம்போல் வாழ்ந்துகொண்டிருந்த பிரிவீனுக்கு 2015-இல் பேரதிர்ச்சி!
Fibromyalgia இருப்பது தெரியவந்தது.
அது தசைகளையும் நரம்புகளையும் பாதிக்கும். எப்போதும் வலி இருந்துகொண்டே இருக்கும்.
"படுத்த படுக்கையில் தான், வேறு வழியில்லை," என்றனர் மருத்துவர்கள்.
துவண்டு போனார் பிரிவீன்.
ஆனால் இதுதான் வாழ்க்கை...எப்படியும் நினைத்ததைச் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதே ஆண்டு triathlon எனப்படும் நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிக்குப் பயிற்சி செய்தார், பங்கேற்றார்.
விமானத்துறையில் பணிபுரிகிறார்.
இன்னும் சவாலான போட்டியில் பங்கேற்க மனம் துடித்தது.
Ironman....சுலபமல்ல! ஒரே நாளில் முடிக்க வேண்டிய மாபெரும் சவால்.
இது ஓர் அனைத்துலகப் போட்டி. 3.8 கிலோமீட்டர் நீச்சல், 180 கிலோமீட்டர் சைக்கிளோட்டம், 42.2 கிலோமீட்டர் ஓட்டம்.
மும்முரமாகப் பயிற்சி செய்கிறார்.
"ஒரு தடவை கடும் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். பாதியில் என்னுடைய கால்கள் வேலை செய்யவில்லை. என்ன செய்வது? சிரித்துக்கொண்டே நீச்சல் குளத்தின் ஓரம் வந்து ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டேன். பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினேன்," என்று இயல்பாகச் சொல்கிறார் திரு பிரிவீன்.
நம்மில் பலர் நொந்துபோவதை இவர் பாடமாகப் பார்க்கிறார்.
"Iron Man போட்டி நாளன்று என்னால் எதுவும் செய்ய முடியாமல்கூடப் போகலாம். அதற்காக என்ன செய்யமுடியும்? என்னிடம் இருப்பது இதுதான், இதை வைத்து என்ன செய்யமுடியும்? அதை மட்டுமே பார்க்கிறேன்," என்று உறுதியுடன் சொல்கிறார் திரு பிரிவீன்.
திரு பிரிவீனின் மனவலிமை பிரமிக்கவைக்கிறது.
திரு பிரிவீனின் காணொளியை "செய்தி" சமூக ஊடகத் தளங்களில் பலர் பார்த்து விருப்பம் தெரிவித்தனர்.
பிரிவீனின் அனுபவம் மிகுந்த ஊக்கமளிப்பதாய் நூற்றுக்கணக்கானோர் 'செய்தி'யின் Facebook, Instagram தளங்களில் கருத்துத் தெரிவித்தனர்.
பலரும் தாங்கள் அனுபவிக்கும் வலியைப் பகிர்ந்துகொண்டனர்.
"அன்றாடம் வலியில் துடிக்கும் பல்லாயிரம் பேருக்கு உங்கள் அனுபவம் ஒரு பெரிய ஊக்கம்." - இதுவே பலரின் கருத்து.