ஆண்கொசுக்களை வைத்துப் பெண்கொசுக்களை ஒழிக்கும் ‘Wolbachia’ - 10 ஆண்டுகள்!
கோப்புப் படம்: AFP/Luis Robayo
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் வொல்பாக்கியா (Wolbachia) திட்டம் தொடங்கி 10 ஆண்டுகளாகிறது.
அது எப்படித் தொடங்கப்பட்டது? திட்டத்தின் நோக்கம்தான் என்ன?
வொல்பாக்கியா திட்டம் - எப்போது, எப்படித் தொடங்கியது?
வொல்பாக்கியா திட்டம் முதன்முதலில் 2016ஆம் ஆண்டு தொடங்கியது.
முதலில் பிராடல் ஹைட்ஸ் (Braddell Heights) பகுதியில் சோதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் டெங்கி நோய்ப் பரவலைக் குறைக்க அந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
திட்டம் எப்படி வேலை செய்கிறது?
டெங்கி பரவக் காரணம் ஏடிஸ் பெண் கொசுக்கள்.
வொல்பாக்கியா கிருமியுள்ள ஆண் ஏடிஸ் கொசுக்கள் வட்டாரத்தில் விடுவிக்கப்படுகின்றன. அவை ஏடிஸ் பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்.
அவை உருவாக்கும் முட்டைகள் பொரிவதில்லை.
வொல்பாக்கியா கிருமியுள்ள ஆண் கொசுக்கள் கடிப்பதுமில்லை.
அவற்றால் நோயைப் பரப்ப முடியாது.
விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்தில் அவை மாண்டுவிடும்.
திட்டத்தின் நோக்கம் அடையப்பட்டதா?
2019 டிசம்பரில் வொல்பாக்கியா கிருமி கொண்ட ஏடிஸ் கொசுக்களை உருவாக்கும் தொழிற்கூடம் திறக்கப்பட்டது.
வாரத்துக்கு 5 மில்லியன் ஆண் கொசுக்களை உருவாக்க அங்கு வசதி உள்ளது.
அங்குள்ள முட்டை வங்கியில் சுமார் 36 மில்லியன் முட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
திட்டத்தைச் செயல்படுத்தியது முதல் ஏடிஸ் பெண் கொசுக்களின் எண்ணிக்கை 80 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை குறைந்திருப்பதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியது.
டெங்கிக் காய்ச்சல் பரவும் அபாயமும் 70 விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளது.
சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதிக்குள் பாதிக்கும் அதிகமான வீடுகளில் வொல்பாக்கியா திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும்.
மேலும் ஐந்து வட்டாரங்களில் வொல்பாக்கியா கிருமியுள்ள ஆண் கொசுக்கள் விடுவிக்கப்படும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு அண்மையில் சொன்னது.
புக்கிட் பாஞ்சாங், லிட்டில் இந்தியா, பயனியர், தோ பாயோ, அங் மோ கியோ ஆகியவற்றில் கொசுக்கள் விடுவிக்கப்படும்.
அவற்றையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் 800,000க்கும் அதிகமான வீடுகள் திட்டத்தில் இருக்கும்.