செந்தோசாவைப் பாதுகாப்பது எப்படி?

(படம்: Facebook/Sentosa)
செந்தோசா தீவைப் பாதுகாக்கும் முயற்சிகள் தீவிரமடைகின்றன.
மணலைக் கொட்டி நிரப்புதல், செயற்கைப் பவளப்பாறைகளை உருவாக்குதல், அணைக்கட்டு அமைத்தல் போன்றவை அதற்குச் சில வழிகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உயரும் கடல்மட்டத்திற்கு இடையே செந்தோசா கடலோரத்தைப் பாதுகாப்பதற்குரிய ஆய்வு அரசாங்கத்தின் ஆதரவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது.
அதனையொட்டி நிபுணர்கள் சில யோசனைகளை முன்வைக்கின்றனர்.
எதுவும் செய்யாமற்போனால் 2100ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் 30% நீருக்கடியில் சென்றுவிடக்கூடும்.
செந்தோசாவின் 16 கிலோமீட்டர் கரையோரத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்?
அதற்குச் சில புத்தாக்க அணுகுமுறைகள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தீர்வுகள், கடற்கரைக்கு மக்கள் செல்வதைத் தடுக்காமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
செயற்கைப் பவளப்பாறைகளைப் பொருத்துவது இயற்கை சார்ந்த தீர்வு.... அவை கடலோரத்தைப் பாதுகாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
பெரிய அலைகள் கரையைத் தொடுவதற்கு முன்பே அவற்றைத் தடுத்துவிடும்.
சூறாவளியின்போது கடற்கரையில் மண்ணரிப்பைத் தடுத்துக் கடலோரத்தைப் பாதுகாக்கும்.
சிறுசிறு தீவுகளுக்கு இடையில் தடுப்புகளை அமைக்கலாம்; அவற்றை அலைகளின் உயரத்துக்கேற்ப மேலும் கீழும் மாற்றிக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அவ்வளவு யோசனைகள் இருந்தாலும் சில கேள்விகளும் உள்ளன.
எவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், எப்போது செயல்படுத்தப்பட வேண்டும்? எவ்வளவு செலவாகும்?
இவற்றுக்கான பதில்கள் செந்தோசா மேம்பாட்டுக் கழகம் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் நடத்தும் ஆய்வில் தெரியவரலாம்.