சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
தொடக்கப்பள்ளி இறுதித்தேர்வு முடிவுகள்....வெற்றிக்கான ரகசியம்?

தொடக்கப்பள்ளி இறுதித்தேர்வு முடிவுகள் இன்று (23 நவம்பர்) வெளியிடப்பட்டன.
தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இருவர் தங்களது வெற்றிக்கான ரகசியத்தைச் 'செய்தி'-உடன் பகிர்ந்துகொண்டனர்.
திட்டமிடுதல்
ஹாக்கி மீதும் படிப்பு மீதும் ஆர்வம் கொண்ட மாணவர் இன்பப்புகழ் குமரப்பன் உயர்நிலைப் பள்ளிக்கு நேரடிப் பள்ளிச் சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் தகுதிபெற்றுள்ளார்.

" நான் தேர்வுகளுக்குத் திட்டமிட்டுப் படித்ததால் தேர்வுகள் சுலபமாக இருந்தன. எனக்கு ஹாக்கி மீது அதிக ஆர்வம் உள்ளது."
"அதனால் நான் நேரடிப் பள்ளிச் சேர்ப்பு நடவடிக்கை வழி விக்டோரியா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துள்ளேன். கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்குவது என்னுடைய இலக்கு," என்று ராடின் மாஸ் (Radin Mas) தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த அவர் கூறினார்.
விடாமுயற்சி
விடாமுயற்சியால் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடிந்ததாகக் கூறுகிறார், St. Anthony’s தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஹசானா.

"தேர்வுகளில் சிறப்பாகச் செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். முதற்கட்ட தேர்வுகளை விடச் சிறப்பாகச் செய்துள்ளேன். தேர்வுக்கு நான் கடுமையாக உழைத்தேன்."
"என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோர் ஊக்கமளித்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் எனக்குப் பெரிய பலமாக அமைந்தது. நான் இன்னும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்று தூண்டியது," என்று ஹசானா சொன்னார்.
தேர்வு முடிவுகள் கிடைத்துள்ள நிலையில் மாணவர்கள் அடுத்து தாங்கள் செல்ல விரும்பும் உயர்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கான படிவத்தை இன்று பெற்றுக்கொண்டனர்.
மாணவர்களுக்கு எந்த உயர்நிலைப் பள்ளியில் இடம் கிடைத்திருக்கிறது என்பது அடுத்த மாதம் 21ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதிக்குள் தெரியவரும்.