Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"இந்தியாவுக்குச் செல்ல இனி PCR பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை" - அளவில்லா மகிழ்ச்சியில் சிங்கப்பூரர்கள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் வரும் திங்கட்கிழமையிலிருந்து (13 பிப்ரவரி) புறப்பாட்டுக்கு முந்திய COVID-19 PCR பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என இந்தியச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

சீனா, தென் கொரியா, தாய்லந்து, ஜப்பான், ஹாங்காங் ஆகிய இடங்களிலிருந்து இந்தியா செல்வோருக்கும் அது பொருந்தும். 

அறிவிப்பு குறித்து சிங்கப்பூரிலுள்ள சில பயண முகவர்களையும் பொதுமக்களையும் தொடர்புகொண்டது 'செய்தி'.

சிங்கப்பூர்ப் பயண முகவர்கள்....

"இந்தத் தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. PCR பரிசோதனை கட்டாயம் என்பதால் சிலர் பயணத்தைத் தள்ளி வைத்தனர். ஆனால், இன்று காலை முதல் இந்தியாவுக்கான பயணம் குறித்து நிறைய அழைப்புகளைப் பெற்றுவருகிறோம். ஜனவரியைக் காட்டிலும் அடுத்த வாரம் தொடங்கி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 15 விழுக்காடு வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்."

-அகமது, பயணச்சீட்டு அதிகாரி, Thanjai Tours & Travels Pte Ltd

"PCR பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என்ற தகவல் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. நான் பயணிகளுடன் தற்போது சென்னையில் இருக்கிறேன்."

-செல்வம், நிர்வாக இயக்குநர், Star City Travels

"இது வரவேற்கத்தக்க முடிவு. PCR பரிசோதனைக்குச் செலவாகும். 50இல் இருந்து 100 வெள்ளிப் பணத்தை இனி மிச்சப்படுத்தலாம். அலைச்சல் குறையும். பயண முகவர்களைப் பொறுத்தவரை, பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களது வருமானம் உயரும்."

-ரவி வேலு இயக்குநர், Raiinbow Travels Pte Ltd

பொதுமக்கள் சிலரின் கருத்து...

"கடந்த வாரம் இந்தியாவில் இருக்கும் என் அம்மாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. PCR பரிசோதனை செய்யும் நிபந்தனை காரணமாக உடனடியாக இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியவில்லை. 2 நாள்கள் பிடித்தன. பரிசோதனை வேண்டாம் என்றில்லை. அவசரச் சூழ்நிலைக்கு ஏற்ற நடைமுறைகள் இருந்தால் சிறப்பு."

- கலையரசி கிருஷ்ணராஜன், 43 வயது

"சுகாதாரம், சுற்றுலா ஆகிய 2 துறைகளுக்கும் நன்மை பயக்கும் அறிவிப்பு. சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் Herd Immunity எனும் கூட்டுத் தடுப்பாற்றல் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. பொருளியல் ரீதியாக வருமானம் அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும்."

- சந்திரசேகரன், வயது

இதற்கிடையே, PCR பரிசோதனை நடைமுறை தொடர்ந்தாலும் அதில் தமக்கு பிரச்சினையில்லை என்கிறார் 63 வயது ஜெயந்தி.

"PCR பரிசோதனைக்குப் பயந்து உடல்நலம் குன்றியவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்த்து வந்தனர். அந்த நிபந்தனை இல்லாவிட்டால் பயணம் எப்படி இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது."

இந்தியா வருவோருக்கு PCR பரிசோதனை தேவையில்லை என்றபோதும் பயணிகளில் இரண்டு விழுக்காட்டினருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்று புதுடில்லி தெரிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்