சிங்கப்பூர் exclusive
சாப்பாடு கொண்டுவரும் Robot… சாலையை எப்படிக் கடக்கும்?
(படம்: நீவன் பஞ்சுநாதன்)
This audio is generated by an AI tool.
இயந்திர மனிதக் கருவிகள் விரைவில் சாப்பாடு விநியோகம் செய்யலாம், வட்டாரத்தைக் கண்காணிக்கலாம்.
ஆனால் அவற்றால் சாலையைக் கடக்க முடியுமா?
AMR எனப்படும் தானியக்க இயந்திர மனிதக் கருவிகளை (Robot) ஆராய புதிய முயற்சியில் இறங்கியுள்ளது நிலப் போக்குவரத்து ஆணையம்.
அது குறித்து ஆணையத்திடம் விவரம் கேட்டது "செய்தி".
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் AMRகளைச் சோதனை செய்யும் திட்டத்தின்கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று ஆணையம் சொன்னது.
பொதுவாகச் சாலைச் சந்திப்புகளில் பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்கான பொத்தனை அழுத்தினால் 'பச்சை மனிதன்' சமிக்ஞை விளக்கு சற்று நேரத்தில் தோன்றும்.
ஆனால் AMRகளால் அவ்வாறு பொத்தானை அழுத்த முடியாது.
அதற்கு வழி?
நான்கு RFID வானலை வாங்கிகள் (antenna) பொருத்தப்படவிருக்கின்றன.
AMR கருவிகளுக்குள் RFID அட்டை இருக்கும்.
RFID அட்டை தொடர்பில்லாமலேயே சமிக்ஞைப் பொத்தானை அழுத்தும்.
அதற்கான ஏலக்குத்தகைக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
வானலை வாங்கிகள் பொங்கோல் வே, நியூ பொங்கோல் ரோட் (Punggol Way, New Punggol Road) சாலை சந்திப்பில் உள்ள சமிக்ஞை விளக்குகளில் பொருத்தப்படும் என்றது ஆணையம்.
உணவு, பொருள் விநியோகம், கண்காணிப்புப் பணிகள், துப்புரவுப் பணிகள் ஆகியவற்றில் AMRகள் பாதுகாப்பாக இயங்குவது குறித்தும் ஆராயப்படுகிறது.
AMRகளைச் சாலைகள், பொது நடைபாதைகளில் பயன்படுத்துதவற்கு முன் அவை பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்வது முக்கியம்.
- அவை குறைவான வேகத்தில் இயங்க வேண்டும்.
- அவை அனுமதிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே சோதிக்கப்பட வேண்டும்.
- அவை எளிதில தென்படும் வகையில் இருப்பது அவசியம்.
- அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஊழியர்கள் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- சேதம் ஏற்பட்டால் ஈடுசெய்ய AMRகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் உரிய காப்புறுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
சோதனை திட்டதின் முடிவுகள், எதிர்காலத் தேவைகள், சுற்றுச்சூழலின் தன்மை ஆகியவை ஆராயப்படும்.
முடிவுகளைப் பொறுத்து AMRகளைச் சிங்கப்பூரின் மற்ற வட்டாரங்களில் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஆணையம் சொன்னது.