'சில வாரங்கள் கடுமையான நடவடிக்கைகள் நடப்பில் இருந்தால், பல மாதங்கள் நிம்மதியாக இருக்கலாம்'
சில வாரங்கள் கடுமையான நடவடிக்கைகள் நடப்பில் இருந்தால், பல மாதங்கள் நிம்மதியாக இருக்கலாம்'
சிங்கப்பூரில் சமூக அளவில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கருத்தில்கொண்டு சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவுள்ளன.
நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் உதவும் என்று பலர் கருதுகின்றனர்.
விரைந்து செயல்படுவதால் மற்றோர் அதிரடித் திட்டத்தைத் தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.
உருமாற்றம் கண்ட சில வகைக் கொரோனா கிருமிகள் சமூக அளவில் பரவியுள்ளன. அதனால் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன்
ஆபத்தான, வேகமாகப் பரவக்கூடிய அந்தக் கிருமிகளைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவதால் வர்த்தகத்திலும் சமூகத்திலும் பெரிய அளவில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம், பழைய நிலைக்கு மீண்டு வரலாம்.
- ஹரி ( மென்பொருள் பொறியாளர் )
மக்களைச் சந்திக்கும் பணியில் இருப்போரும், புதிய கட்டுப்பாடுகளால் பதற்றமடையவில்லை என்றனர்.
கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் நிலைமை முற்றுவதைவிட இது சிறந்தது என்றும அவர்கள் கூறினர்.
நாளொன்றுக்கு 5 முதல் 6 வாடிக்கையாளர்களை அவர்களது வேலையிடங்களுக்குச் சென்று பார்ப்பது வழக்கம், ஆனால் புதிய கட்டுப்பாடுகளால் இணையம் வழி தான் இனி அவர்களை தொடர்புகொள்ள முடியும்.
முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் மற்றோர் அதிரடித் திட்டத்தைத் தவிர்க்க உதவும். அதனால் வர்த்தகங்களும் முன்னைப் போல் பாதிக்காது.
- கௌதம் துரை ( கணக்காளர் )
அடுத்த சில வாரங்களுக்கு உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்படுகின்றன. இதற்கு முன்னர் அந்த இடங்கள் நோய்ப்பரவல் ஏற்படும் அபாயமிக்க இடங்களாக வகைப்படுத்தப்பட்டன என்றார் முதுநிலைக் கல்வியை மேற்கொள்ளும் ரக்க்ஷா.
சில வாரங்கள் வீட்டில் இருந்து பயிற்சி செய்யலாம் அல்லது மெது ஓட்டங்களை செய்யலாம். இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
சமூக ஒன்றுகூடல்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 5க்குக் குறைக்கப்பட்டதில் சிலருக்கு வருத்தம்.
வாரயிறுதில் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் வெளியே செல்ல சில முன்பதிவுகள் செய்திருந்தேன். அவற்றை இப்போது ரத்து செய்துள்ளேன்.
இருப்பினும், பாதுகாப்பும் நோய்ப்பரவலைக் குறைப்பதும் தான் தற்போது முக்கியம்.
-கவித்தேஷ் குமார் ( தொழில்முனைவர்)
சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்ப்ப்பரவல் மிகவும் குறைந்து கிட்டத்தட்ட வழக்கநிலைக்கு வாழ்க்கை திரும்பியபோது, அது மீண்டும் அதிகரித்தது கவலைக்குரியது என்றார் ஆராய்ச்சியாளரான டாக்டர் அருண் குமார். அதைத் தடுக்க ஒரே வழி கட்டுப்பாடுகள் தான் என்றும் அவர் வலியுறுத்திச் சொன்னார்.
அறிகுறி இல்லாமல் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் அதனால் சந்தைகள், கடைகள் ஆகியவற்றிலும் கூடுதல் நடவடிக்கைகள் எடுத்தால் இன்னும் நல்லது.
ஓரிரு வாரங்கள் கடுமையான நடவடிக்கைகள் நடப்பில் இருந்தால் பல மாதங்கள் தொல்லையில்லாமல் இயல்பான வாழ்க்கை அமையும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் வரும் 8ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 30ஆம் தேதிவரை புதிய விதிமுறைகள் நடப்பில் இருக்கும் என அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு அறிவித்துள்ளது.