Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு நிகழ்வுகளைத் தொடரும் வழிபாட்டுத் தலங்கள்

சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்ப்பரவல் அதிகரித்துள்ளதால் வரும் 8ஆம் தேதி முதல் சில கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வருகின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சமூக அளவில் நோய்ப்பரவல் அதிகரித்துள்ளதால் வரும் 8ஆம் தேதி முதல் சில கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வருகின்றன.

முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை ஏற்கெனவே எடுத்துவிட்டதால் புதுக்கட்டுப்பாடுகளால் பெரிதாகச் சிக்கல் இல்லை என்று வழிபாட்டுத் தலங்கள் தெரிவித்துள்ளன.

அது தொடர்பாக "செய்தி" சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேசியது.

தேவாலாயத்திற்கு வழக்கமாக வருபவர்களுக்கு ஏற்கெனவே தகவல்களை அனுப்பிவிட்டதாகச் சொன்னார், ஷார்ட் ஸ்டீரீட் மெதடிஸ்ட் (Short Street Methodist) திருச்சபையின் போதகர் ஜேம்ஸ் நகுலன் (James Nakulan).

விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"சமூக அளவில் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்தே நாங்கள் திட்டங்கள் வகுக்கத் தொடங்கிவிட்டோம்.

இப்போது 100 பேருக்குத் தான் அனுமதி, ஆனால் நாங்கள் அதை சுமார் 80 ஆகக் குறைத்து பாதுகாப்பு இடைவெளியை அதிகரித்துள்ளோம்."

"ஆராதனைப் பாடல் அண்மையில் தான் தொடங்கியது இப்போது மீண்டும் நிறுத்தப்பட்டது வருத்தம் தருகிறது. இருப்பினும் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் மிக முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது."

என்று அவர் சொன்னார்.

பென்கூலன் பள்ளிவாசலின் திரு. ரபீஃக், அரசாங்கத்தின் முடிவுகளை முழுமையாக ஆதரிப்பதாகச் சொன்னார்.

8ஆம் தேதி முதல் தொழுகை எப்படி இடம்பெறும் என்ற மேல் விவரங்களுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் ரமதான் மாதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் மக்களுக்குச் சற்று வருத்தம் என்றார் அவர்.

"கடந்த ஆண்டு நோய்ப்பரவல் தீவிரமாக இருந்ததால் பள்ளிவாசல்களில் பல நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தன.

தற்போது நிலைமை மாறுபட்டு பழைய நிலைக்கு வந்துவிடுவோம் என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் சமூக அளவில் பாதிப்புகள் அதிகமாகியுள்ளன."

என்றார் அவர்.

இந்துக் கோவில்களில் 100 பேர் வரை அனுமதிப்பது பிரச்சினை இல்லை என்றார் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலைச் சேர்ந்த திரு சிவக்குமரன் சாத்தப்பன்.

மக்கள் நகர்ந்து கொண்டே இருப்பதால் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

"மக்களை கண்காணிக்கத் தொண்டூழியர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒரு நேரத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதால் புதிய மாற்றத்தால் ஏதும் பாதிப்பு இருக்காது."

காலை வேளையில் பக்தர்களுக்கு நடை திறப்பதற்கு முன்னரே சிறப்புப் பூஜைகள் எப்போதும் போல் செய்து முடிக்கப்படுகின்றன.

சில நேரம் சிறப்பு வழிபாடுகள் இருக்கும் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும் மொத்த எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை கண்காணித்துக் கொண்டே இருப்போம் என்றார் திரு சிவக்குமரன்.

வழிபாட்டுத்தலங்களில் 250 பேர் வரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.

ஆனால் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக ஒரே நேரத்தில் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டால், Pre-Event Testing (PET) என்கின்ற COVID-19 முன் பரிசோதனை கட்டாயமாக்கப்படும்.

நேரடி இசை, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

குழுவாக வருவோர் ஐவருக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாடும் வரும் 8ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும். 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்