சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
மோசடிக்காரர்களின் உத்திகள்
இணைய மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
அன்றாடம் பல தகவல்கள், குறுஞ்செய்திகள், WhatsApp தகவல்கள், மின்னஞ்சல்களைப் பெறுகிறோம்.
இவற்றில் எது மோசடி? எது உண்மை? எது பொய்? குழம்பிப் போகிறோம்.
மோசடிக்காரர்களின் வலையில் சிக்காமல் இருக்க அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் உத்திகளைத் தெரிந்துகொள்வது முக்கியம்.
இணையப் பாதுகாப்பு நிபுணர் கணேஷ் நாரயணன் அந்த விவரங்களைச் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டார்.
-- "சூதாட்டத்தில் உங்களுக்குப் பெரிய பரிசு கிடைத்துள்ளது.. அந்தப் பரிசைப் பெற இந்த வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பிவிடுங்கள்" - இது போன்ற தொலைபேசி அழைப்போ குறுஞ்செய்தியோ வந்தால் அது நிச்சயம் மோசடி.
-- குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருக்கு ஆபத்து என்று கூறி சிகிச்சைக்குப் பணம் கேட்பது இன்னொரு வகையான உத்தி.
-- அரசாங்க அமைப்பைப்போல் தொலைபேசி வாயிலாக அழைத்து குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று மோசடிக்காரர்கள் கூறுவதுண்டு. எந்த அரசாங்க அமைப்பும் தொலைபேசி வழி அழைத்து அபராதம் கேட்காது.
-- மோசடிக்காரர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களில் நிறைய பிழைகள் இருக்கும். எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை போன்றவை இருக்கும். அதன் வழி அது மோசடி மின்னஞ்சல் என்று கண்டுபிடித்துவிடலாம்.
பொதுமக்கள், குறிப்பாக மூத்தோர், மக்கள் கழகம் போன்ற அமைப்புகள் நடத்தும் பயிற்சிப் பயிலரங்குகளுக்குச் சென்று மோசடியை எவ்வாறு தவிர்ப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் திரு கணேஷ்.