முழுநேர தேசியச் சேவையாளரின் மரணத்திற்குக் காரணமான சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிக்கு ஆறு மாதச் சிறை

(படம்: CNA/Wallace Woon)
தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முழுநேர தேசியச் சேவையாளரின் மரணத்திற்குக் காரணமான
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
39 வயது முகமது கமில் முகமது யாசின் (Muhammad Kamil Mohamed Yasin) இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
19 வயதான சர்ஜண்ட் எட்வர்ட் H கோ (Sergeant 1 (SGT1) Edward H Go) சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு நடவடிக்கையின் போது இறந்த முதல் தீயணைப்பாளர் என்று தெரிவிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ஹெண்டர்சன் ரோடு புளோக் 91இல் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டபோது கோ மயங்கி விழுந்தார். பிறகு மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் மாண்டார்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் விதிகளின்படி குறைந்தபட்சம் இருவராகச் சேர்ந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.
ஆனால் கமில் கோவைத் தனியாகப் பணியாற்ற விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து சென்றார்.
மேலும் கோ தனியாகப் பணியாற்றுவது குறித்து மற்ற அதிகாரிகளிடமும் தெரிவிக்கவில்லை.
தீயணைப்புப் பணிகளுக்கு உதவப் பிற்பகல் 12.55 மணியளவில் மற்றுமொரு குழு, சம்பவ இடத்திற்கு வந்தபோது கோ அசைவின்றிக் காணப்பட்டார்.
பிற்பகல் 2.15 மணியளவில் கோ மாண்டதாக அறிவிக்கப்பட்டது.
கோவிற்கு மரணத்தை விளைவிக்கும் வகையில் பொறுப்பின்றிச் செயல்பட்டதற்காகக் கமிலுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுச் சிறை, 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.