Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

பள்ளி விடுமுறை வந்துவிட்டது... சிங்கப்பூரில் பணமாற்று வர்த்தகம் எப்படி இருக்கிறது?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டது.

பலர் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லத் தொடங்கிவிட்டனர்.

சுற்றுலாவுக்குமுன் அவர்கள் நாடும் முக்கிய இடங்களில் ஒன்று நாணயம் மாற்றும் கடைகள்.

விடுமுறைக் காலத்தில் சிங்கப்பூரில் பணமாற்று வர்த்தகம் எப்படி இருக்கிறது?

பதில் தேடிச் சென்றது 'செய்தி'.

"வர்த்தகம் 50% கூடியுள்ளது"

சிங்கப்பூரில் வழக்கமான நாள்களைக் காட்டிலும் இந்த விடுமுறைக் காலத்தில் பணமாற்று வர்த்தகம் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக Mustafa Foreign Exchange மேலாளர் ஜமாலுன் நாஸிர் தெரிவித்தார்.
"ஆஸ்திரேலிய டாலர், யூரோ, பவுண்டு ஸ்டெர்லிங் தவிர்த்து மலேசியா, தாய்லந்து, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளின் நாணயம் அதிகம் மாற்றப்படுகிறது,"

என்றார் அவர்.

ஆசிய நாடுகளுக்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளி மிகவும் வலுவாக இருப்பதே அதற்குக் காரணம் என்கிறார் தெம்பனீஸ் கடைத்தொகுதியில் கடை வைத்திருக்கும் Chandra Exchangeஇன் மேலாளர் பிரபு.

"தாய்லந்து, இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சுற்றுலாச் செலவினம் மிகக் குறைவாக இருக்கும். அதனால் சிங்கப்பூரர்கள் அங்குச் செல்ல அதிகம் விரும்புகின்றனர்,"

என்றார் அவர்.

சிங்கப்பூரின் சில இடங்களில் அங்கு வசிக்கும், அங்கு வருகை புரியும் மக்களின் தேவையைப் பொறுத்து நாணயமாற்று வர்த்தகம் அமைகிறது.

ஆர்ச்சட் ரோட்டில் உள்ள NewsCrest Exchange கடை உரிமையாளர் சையது ஹபீப்,

"லக்கி பிளாஸா வட்டாரத்தில் பிலிப்பீன்ஸ் பெசோவை மாற்றுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்,"
Related article image

என்றார்.

சுற்றுலாவுக்குமுன் பணத்தை மாற்றி வைத்துக் கொள்ளலாம்

பணமாற்று விகிதம் எந்த நாளில் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க முடியாது. எனவே தேவை ஏற்படும்போது மட்டும் அதனை மாற்றினால் நல்லது என்று ஆலோசனை கூறினார் ஜமாலுன்.

பெரிய தொகையாக இருந்தால் அதை 3 முறை சிறுகச்சிறுக மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

சுற்றுலாவுக்குச் சென்று திரும்பியதும் மீதிப் பணத்தை மீண்டும் சிங்கப்பூர் வெள்ளிக்கு மாற்றி வைத்துக்கொள்வது நல்லது; அதன்வழி ஒருநாட்டில் திடீரென பணக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றார் பிரபு.

Related article image
பணமாற்று வர்த்தகத்தில் எழும் சவால்.....

தற்போதைக்கு மின்னிலக்கக் கட்டண முறையே இந்தத் தொழிலில் பெரிய சவாலாக இருப்பதாகக் கூறினார் ஹபீப்.

"இளையர்கள் மின்னிலக்கக் கட்டணத்தை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் இன்னும் ரொக்கப் பணமாற்று வர்த்தகத்தையே விரும்புகின்றனர். அது சற்று ஆறுதல், " என்றார் ஹபீப்.

இன்னும் பத்தாண்டுகளில் பணமாற்று வர்த்தகர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையலாம்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதற்கு ஏற்ப பணமாற்று வர்த்தகர்கள் சிங்கப்பூரின் விடுமுறை நாள்களில் முடிந்தவரை வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்