Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதியோர் COVID-19 தடுப்பூசி போடத் தயங்குவது ஏன் - நாள்பட்ட நோய்கள், அலட்சியப்போக்கு?

சிங்கப்பூரில் 70 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூத்தோர், COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் 70 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூத்தோர், COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

அந்த வயதுடைய மூத்தோரில், சுமார் 71 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதிவு செய்துள்ளனர்.

மற்ற வயதினருடன் ஒப்பிடுகையில், அது ஆகக் குறைவு.

அவர்களிடையே ஏன் இந்தத் தயக்கம்?

அது குறித்து Tayka குடும்ப மருந்தகத்தின் டாக்டர் கண்ணன் 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு சில காரணங்களே உள்ளதாக அவர் கூறினார்.

"வயது, முதல் தடுப்பூசிக்குப் பின் பக்கவிளைவுகள், ரத்த வட்டுகளின் (Platelets) எண்ணிக்கை 50க்கும் கீழ் இருப்பது"

ஆகியவை அதில் அடங்கும்.

ரத்த வட்டுகள் என்பவை, ரத்தக் கசிவு, காயங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க உதவும் உயிரணுக்கள்.

ரத்த வட்டுகளின் எண்ணிக்கை 50க்கும் கீழ் உள்ளவர்களுக்கு ஊசி போட்டால், அவர்களின் நிலை மோசமாகலாம் என்பதால் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது என்று டாக்டர் கண்ணன் குறிப்பிட்டார்.

நாள்பட்ட நோய்கள் ஒரு காரணமா?

மூத்தோர், COVID-19 தடுப்பூசியைத் தவிர்ப்பதற்கு நாள்பட்ட நோய்கள் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்றார் அவர்.

நாள்பட்ட நோய்கள் இருப்பவர்கள், கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

அதனால், அவர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் கண்ணன் தெரிவித்தார்.

தங்கள் உடல்நலம் கருதி ஏதேனும் சந்தேகமோ கேள்வியோ இருந்தால், மூத்தோர் மருத்துவர்களை நாடலாம் என அவர் சொன்னார்.

முதியோரிடையே அலட்சியப்போக்கு

"பல ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டேன். எனக்கு எதற்குத் தடுப்பூசி..."

என்ற மனப்போக்கு சில முதியோரிடம் இருக்கலாம்.

அதைக் கடந்து வருவது கடினமே என்றார் டாக்டர் கண்ணன்.

"தடுப்பூசி போடாத முதியோர், தங்களின் உற்றார் உறவினர், குறிப்பாகச் சிறு பிள்ளைகளுக்குக் கிருமியைப் பரப்பும் அபாயம் உள்ளது."

"அதை முதியோர் உணர வேண்டும். 12 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகள் இன்னும் தடுப்பூசி போட முடியாது."

என அவர் நினைவூட்டினார்.

பல ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டால் என்ன? ஒவ்வொரு நாளையும் புதிய வாய்ப்பாக எண்ணி, சிறப்பாக வழி நடத்த நாம் அனைவரும் முனைய வேண்டும்.

மேலும், COVID-19 கிருமித்தொற்றுச் சூழலிலிருந்து பாதுகாப்பாக மீண்டு வர, அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

அதற்கு, முதியோர் உட்பட சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்