காஸா மக்களுக்கு உதவ சிங்கப்பூரில் புதிய SG for Humanity அமைப்பு
(படம்: Singapore Red Cross)
This audio is generated by an AI tool.
காஸா மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வலுப்படுத்த சிங்கப்பூரில் புதிய SG for Humanity அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அது அரசாங்கம், மனிதாபிமான அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருள்கள் நேரடியாகச் சென்றுசேர்வதை உறுதிசெய்வதும் சிங்கப்பூரர்கள் நேரடியாக உதவுவதற்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதும் அதன் நோக்கங்கள்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு அதனைத் தெரிவித்தது.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகமது (Zaqy Mohamad) உள்ளிட்ட மூன்று அரசியல் பிரமுகர்கள் இன்று அந்தப் பணியைத் தொடங்கிவைத்தனர்.
Humanity Matters, Mercy Relief, ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனம் (RLAF), சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய நான்கு அமைப்புகள் முதற்கட்டமாக இணைந்துள்ளன.
காஸாவுக்கு மனிதாபிமானப் பணியில் பங்கெடுத்தபோது காஸா மக்களுக்கு மேலும் உதவி வழங்கலாம் என்று உணர்ந்ததாகத் திரு ஸாக்கி செய்தியாளர்களிடம் கூறினார்.
சிங்கப்பூரர்கள் பலர் இதே கண்ணோட்டத்தைப் பகிர்வதாக அவர் சொன்னார்.
நன்கொடை வழங்குவதோடு சிங்கப்பூரர்கள் தங்கள் நேரத்தையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி உதவலாம் என்றார் அவர்.
மருத்துவ நிபுணர்கள் மனிதாபிமானப் பணிகளில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தாலும் அதற்கான அரசாங்கத் தளம் இதுவரை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
உதவி மிகவும் தேவைப்படும் குடும்பங்களையும் குழந்தைகளையும் சென்றடைவதை உறுதிசெய்ய வெளிநாட்டு அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றவிருப்பதாகவும் திரு ஸாக்கி சொன்னார்.
மருத்துவச் சிகிச்சை, குடிநீர்ச் சுத்திகரிப்பு, உணவு, நடமாடும் மருத்துவச் சேவைகள் ஆகியவற்றில் நான்கு அமைப்புகளும் வெவ்வேறு திறன்களைக் கொண்டிருப்பதாக வெளியுறவுத் துணையமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் (Zhulkarnain Abdul Rahim) கூறினார்.
அவற்றின் வளங்களை ஒன்றிணைப்பதன்மூலம் கூடுதல் உதவிகளை வழங்க முடியும் என்றார் அவர்.
வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் பாதுகாப்பு, சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவும் அரசாங்கம் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.