காலணிகளில் கலை- இளையர்களின் ரசனைக்கு ஏற்ப ஓவியம் தீட்டிக்கொடுக்கும் சிங்கப்பூர்ப் பெண்
காலணிகளில் கலை- இளையர்களின் ரசனைக்கு ஏற்ப ஓவியம் தீட்டிக்கொடுக்கும் சிங்கப்பூர்ப் பெண்
படங்கள்: டர்ஷினி ராஜன்
கலை என்று வந்துவிட்டால் அதற்கு எந்த விதக் கட்டுப்பாடோ எல்லையோ இல்லை.
அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு சிங்கப்பூரின் 24 வயது டர்ஷினி ராஜனின் படைப்புகள்.
காலத்திற்கு ஏற்ப வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்- இதுவே இவரது விருப்பமாக இருந்தது.
அதற்குச் செயல் வடிவம் கொடுத்தார். இப்போது காலணிகளில் விதவிதமாக ஓவியங்களை வரைந்து இளையர்களை ஈர்த்து வருகிறார்.
காலணிகளில் ஓவியமா- இளையர்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு எப்படி உள்ளது?
டர்ஷினியிடம் கேட்டறிந்தது "செய்தி".
ஓவியத்தின் மீது ஆர்வம்
சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவேன். கடந்த ஓராண்டாக வீட்டில் அதிக நேரம் கிடைத்தது.
ஓய்வு நேரத்தில் முழு வீச்சுடன் களமிறங்கினேன். அது இப்போது, முழு நேர வேலையாக மாறியுள்ளது.
ஏன் காலணிகளில் ஓவியங்கள் ?
இளையர்களுக்குக் காலணிகள் மீது எப்போதும் தீராக் காதல் உண்டு. ஒவ்வொருவரிடமும் குறைந்தது 3 காலணிகளாவது இருக்கும்.
இளையர்கள் தங்களுக்குப் பிடித்த "Design'' (வடிவம்) அல்லது பிடித்த சித்திரங்களைக் காலணிகளில் பார்க்க விரும்புவார்கள்.
ஆனால் காலணி நிறுவனங்கள் பொதுவாக ஒரு வடிவத்தை, ஒரு நாட்டிற்கு ஏற்ப வடிமைத்து விற்கும். அதனால் இளையர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத வடிவங்கள் கொண்ட காலணிகளை வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இதை வாய்ப்பாக மாற்ற விரும்பினேன், அது இப்போது நல்ல பலனைத் தந்துள்ளது.
என்னென்ன சவால்கள் உள்ளன ?
ஒரு காலணியை வரைய சுமார் 8 மணி நேரம் எடுக்கும். அதற்கான முழுத் திட்டத்தை வடிவமைக்க 5 நாள்களாவது ஆகும்.
சிறு தவறு நேர்ந்தாலும் பெரும் பிரச்சினையாக மாறும். அதனால் முழுக் கவனமும் ஓவியத்திலும் காலணியிலும் மட்டும் தான் இருக்கவேண்டும்.
அதனால் என்னால் மாதம் 5 ஜோடிக் காலணிகள் தான் செய்ய முடிகிறது.
மிகவும் பிடித்த வேலையாக இருந்ததால் முழு நேர வேலையை விட்டு விட்டு இதில் ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டேன்.
இளையர்களை எப்படி ஈர்க்கலாம் ?
சமூக வலைத்தளம் எனக்குப் பெரும் பலம். TikTok, Instagram ஆகிய தளங்களில் தற்போது பிரபலமாக இருப்பது எவை என்பதைக் கவனித்துக் கொண்டே இருப்பேன்.
இப்போது ஜப்பானிய உயிரோவியச் சித்திரங்கள் இளையர்களுக்குப் பிடித்த ஒன்றாக உள்ளது. அதனால் அது தொடர்பான வடிவங்களை இளையர்களுக்கு அறிமுகப்படுத்தினேன், அது நல்ல வரவேற்புப் பெற்றது. அதற்கு முன் காற்பந்தாட்ட வடிவங்கள் பிரபலமாக இருந்தன. இது மாறிக்கொண்டே இருக்கும்.
கட்டணம்?
காலணிகளின் மீது ஓவியம் வரைவதற்கு என்று தனிச் சாயம் உள்ளது. அதை மட்டுமே பயன்படுத்த முடியும். ஓவியத்தின் வடிவத்திற்கு ஏற்ப ஒரு ஜோடிக் காலணிக்கு 80 திலிருந்து 120 வெள்ளி வரை சேவைக் கட்டணமாக வாங்குகிறேன்.
எதிர்காலத் திட்டங்கள் ...
காலத்திற்கு ஏற்ப தொழிலில் மாற்றம் தேவை என்பதால் இப்போது தலைக்கவசம், சறுக்குப் பலகை (Skateboard) போன்றவற்றில் ஓவியங்கள் வரையத் தொடங்கியுள்ளேன்.
வரும் நாள்களில் ஆடைகள், பைகள் போன்றவற்றிலும் வரையத் திட்டமிட்டுள்ளேன்.
பிடித்த வேலையைச் செய்வதால் ஒவ்வொரு நாளும் புத்தாக்கமாக யோசிக்கவும் புது முயற்சிகள் செய்யவும் முடிவதாக "செய்தி"-யிடம் தெரிவித்தார் டர்ஷினி.