Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திரைகடல் ஓடியும் தொண்டூழியம் தேடு - வெளிநாட்டுக்குச் சென்று பிறருக்கு உதவிபுரிந்த தொண்டூழியர்கள்

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் (Singapore International Foundation - SIF) அதன் 30ஆம் ஆண்டுநிறைவை முன்னிட்டுச் சிலருக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
திரைகடல் ஓடியும் தொண்டூழியம் தேடு - வெளிநாட்டுக்குச் சென்று பிறருக்கு உதவிபுரிந்த தொண்டூழியர்கள்

(படம்: Singapore International Foundation)

சிங்கப்பூர் அனைத்துலக அறநிறுவனம் (Singapore International Foundation - SIF) அதன் 30ஆம் ஆண்டுநிறைவை முன்னிட்டுச் சிலருக்கு விருது வழங்கிச் சிறப்பிக்கவுள்ளது.

வரும் 7ஆம் தேதியன்று இணையத்திலும் நேரடியாகவும் இடம்பெறவுள்ள அதன் நிகழ்ச்சியில் Citizen Ambassadors என்ற நிலையில் இருக்கக்கூடிய வெளிநாட்டுக்குச் சென்று தொண்டூழியத்தில் ஈடுபடும் சிலருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

அது பற்றிமேலும் தெரிந்துகொள்ள விருது பெறவிருக்கும் திருவாட்டி கன்னிகாதேவி நாராயணசாமி, டாக்டர் ராமசுவாமி அகிலேஸ்வரன் ஆகிய இருவரிடம் செய்தி பேசியது.

உங்களை வெளிநாட்டுக்குச் சென்று தொண்டூழியம் செய்யத் தூண்டியது எது?

தொண்டூழியம் செய்வது எனக்கு என்றுமே மனநிறைவை அளிக்கும்

என்கிறார் டாக்டர் அகிலேஸ்வரன்.

(படம்: Singapore International Foundation)

(படம்: Singapore International Foundation)

அவர் மருத்துவர் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த நாள்களிலிருந்தே தொண்டூழியம் செய்யத் தொடங்கியதாகக் கூறினார்.

பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்ஃபர்டிலிருந்து அவருக்கும் அவரது சக ஊழியர்களுக்கும் Palliative care எனப்படும் வேதனை தணிக்கும் பராமரிப்பில் பயிற்சி அளிக்க ஒரு மருத்துவரும் தாதியும் வந்திருந்தனர்.

அவர்கள் தொண்டூழியத்தின் அடிப்படையில் அத்தகைய பயிற்சி வழங்கியதைக் கவனித்த டாக்டர் அகிலேஸ்வரனைத் வெளியூர்த் தொண்டூழியம் ஈர்த்தது. அவர் இந்தோனேசியாவின் ஜக்கர்த்தா, பாண்டுங் நகரங்களுக்குச் சென்று தொண்டூழியம் புரிந்தார்.

ஆரம்பகாலக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை (2017-2022) மும்பையில் வழிநடத்தும் குழுவின் தலைவராகச் செயல்பட என்னை நியமித்தார்கள்

என நினைவுகூர்ந்தார் திருவாட்டி கன்னிகாதேவி.

(படம்: Singapore International Foundation)

(படம்: Singapore International Foundation)

அவர் அதிலிருந்து இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்த Mukthangan Education Trust என்ற அமைப்பின்கீழ் இருந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கினார். அதன் மூலம் அவர் வெளிநாட்டில் தொண்டூழியம் செய்யத் தொடங்கினார்.

வெளிநாட்டுத் தொண்டூழியத்தில் கண்ட சவால்?

மொழி தெரியாமல் வெளிநாட்டில் இருந்தவர்களுடன் பேசச் சிரமப்பட்டேன்

என்றார் டாக்டர் அகிலேஸ்வரன்.

அவர் அங்கிருந்தவர்களின் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக்கொள்ள முயன்றார்.

அதன்மூலம் தொண்டூழியம் செய்யச் சென்ற இடத்தில் அவரால் பலருடன் நெருக்கமாகப் பழக முடிந்தது.

கிருமிப்பரவல் சூழலால் சென்ற ஆண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை இணையம் வாயிலாக நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது

என்று திருவாட்டி கன்னிகாதேவி சொன்னார்.

(படம்: Singapore International Foundation)

(படம்: Singapore International Foundation)

இணையத்தில் பலவற்றைச் செய்யமுடியாததால் தேவையானவற்றை மட்டுமே கற்பிக்கவேண்டியிருந்தது. அவரும் அவரது குழுவும் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியில் சேர்த்துக்கொண்டனர். பயிற்சி வெற்றிகரமாக நடந்தது.

பயிற்சியின் மூலம் தேவைப்படும் பிள்ளைகளுக்கு உதவ முடிந்தது.

நீங்கள் கற்றுக்கொண்டது?

வாழ்க்கையில் சவால்கள் இருக்கத்தான் செய்யும்... அதிலும் தொடர்ந்து மகிழ்ச்சியாகவும் முனைப்புடனும் இருக்கவேண்டும்

என்று சொல்கிறார் டாக்டர் அகிலேஸ்வரன்.

அவர் தொண்டூழியம் செய்த இடங்களில் குறைந்த வருமானம் போன்ற நிறைய சவால்களை எதிர்நோக்குபவர்களின் வாழ்வில் புதிய மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் கவனித்ததில் மகிழ்ச்சி கொள்வதாகப் பகிர்ந்தார்.

வெவ்வேறு கலாசாரங்களைச் சேர்ந்தவர்களுடன் பழகப்பழக வாழ்க்கையைப் பற்றி மேலும் பலவற்றைக் கற்றுக்கொள்ளலாம்

என்கிறார் திருவாட்டி கன்னிகாதேவி.

அவர் பலரது வாழ்க்கைக் கதைகளைக் கேட்டறிந்ததன் மூலம் வாழ்க்கையைப் பற்றிய பலவற்றைக் கற்றுக்கொண்டதாகச் சொன்னார்.

அறம் செய விரும்பு என்று ஔவையார் கூறினார் அந்நாளில் ...

கடல்தாண்டியும் அறம் செய விரும்பு என்று இந்நாளில் திருவாட்டி கன்னிகாதேவி, டாக்டர் அகிலேஸ்வரன் போன்றவர்கள் சிரமம் பாராது தொண்டூழியம் செய்வதன் மூலம் பிறருக்குப் பேருதாரணமாகத் திகழ்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்